உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாமா? அதற்கான சாத்தியம் இருக்கிறதா?
அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்க முடியுமா என்றும் அப்படி முடியுமென்றால் நாட்டில் எத்தனை கட்சிகளின் உட்கட்சி விவகாரத்தினை தேர்தல் ஆணையம் விசாரிக்குமென்றும் கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதோடுமட்டுமல்லாமல், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமியின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கின் தீர்ப்பு தொடர்பாக பேசிய அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவின் புகழேந்தி, “எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்ற பதவியையும், கட்சியின் பெயரையும் பயன்படுத்தக்கூடாது. வழக்கு விசாரணையில் இருக்கும் வரையில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார். இந்த தீர்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசினார். அவர் கூறுகையில், “உட்கட்சி விவகாரத்தை விசாரிப்பது என்பது தேர்தல் ஆணையத்துக்கு சம்பந்தமில்லாத விஷயம். ஒவ்வொரு கட்சியிலும் அதிருப்தியாளர்கள் இருப்பார்கள். அனைத்தையும் தேர்தல் ஆணையம் விசாரிக்க ஆரம்பித்தால் தேர்தல் ஆணையத்திற்கு வேறு வேலையே இருக்காது.
கட்சியின் சின்னம் விவகாரத்தின் கீழ் இந்த வழக்கை விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் சொல்கிறது. சின்னம் விவகாரத்தின் கீழ் இந்த வழக்கினை விசாரிக்க வேண்டுமென்றால், மூன்று அம்சங்கள் இடம்பெறும். முதலில், எம்.எல்.ஏ, எம்பிக்களின் எண்ணிக்கை. இந்தப்பட்டியல் தேர்தல் ஆணையத்திடமே இருக்கும். அடுத்தது, செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை. இதுவும் தேர்தல் ஆணையத்திடம் இருக்கும். அடுத்தது, கட்சியின் துணை விதிகள். இதை எப்போதுமே தேர்தல் ஆணையம் விசாரிக்காது. ஏனென்றால், இது உரிமையியல் நீதிமன்றத்தின் கீழ் வரும். அதிமுகவைப் பொறுத்தவரை உரிமையியல் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு விவகாரத்தை தேர்தல் ஆணையம் எப்படி விசாரிக்க முடியும். முரண்பாடாகத் தெரியவில்லையா.
மீண்டும் மீண்டும் இந்த விஷயம் சர்ச்சையாவதை எடப்பாடி பழனிசாமி தரப்பு விரும்பாது. ஏனென்றால், தேர்தலுக்கு இன்னும் ஒருவருடம் கூட இல்லை. இது அதிமுக பலவீனமாக உள்ளது போன்ற தோற்றத்தினைக் கொடுக்கும். சட்டரீதியிலான சிக்கல்களை மக்களுக்கு சரியாக கடத்த முடியாது.
சட்ட ரீதியாகவும், பத்திரிகையாளன் என்ற அனுபவ ரீதியாகவும் பார்க்கும்போது இது தேர்தல் ஆணையம் விசாரிக்கும் விவகாரம் கிடையாது. உட்கட்சி விவகாரத்தினை தேர்தல் ஆணையம் விசாரிக்கச் சென்றால், இந்தியா முழுமைக்கும் உள்ள ஆயிரக்கணக்கான கட்சிகளின் உட்கட்சி விவகாரங்களை விசாரிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு உச்சநீதிமன்றத்தில் இதற்கான நிவாரணம் கிடைத்துவிடும் என்றே நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இது தொடர்பாகக் கூறுகையில், “தேர்தல் ஆணையத்திற்கு கட்சியின் விவகாரத்தை விசாரிப்பதற்கான உரிமை இருக்கிறது என்பதை தேர்தல் ஆணையம் மூலமாகவே மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்கிறதோ அவையனைத்தும் தேர்தல் ஆணையத்திற்கும் இருக்கிறது என்பது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.