வெடிகுண்டு மிரட்டல்கள்: துப்பு கிடைக்காமல் தவிக்கும் காவல்துறை.. ATSக்கு மாறிய விசாரணை..
அதிகரிக்கும் மிரட்டல் கலாச்சாரம்
சமீபத்திய நாட்களில் பல்வேறு நாடுகளில் பள்ளி கல்லூரிகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், கனடா என எந்த ஒரு நாடும் விதிவிலக்கல்ல. Dark web / Tor-based anonymous emails மூலமாக உலகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கும், தூதரகங்களுக்கும் விடுக்கப்படும் மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன.
சென்னையில் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பள்ளிகளுக்கு 'வெடிகுண்டு மிரட்டல்' விடுக்கும் கலாச்சாரம் முதன்முதலாக ஆரம்பித்தது. கடந்த 2024 ம் ஆண்டு பிப்ரவரி 8 ம் தேதி திருமங்கலம், அண்ணா நகர், முத்தியால்பேட்டை, பெசண்ட் நகர், அடையார், ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் உள்ளிட்ட 13 பள்ளிகளுக்கு ஒரே நாளில் ஈமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அன்று தொடங்கிய பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடும் வழக்கம் ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்து, இருதினங்களுக்கு முன் (ஜூன் 27) கே.கே நகரில் உள்ள பள்ளிக்கு மிரட்டல் விடுத்தது வரை எண்ணிலடங்கா மிரட்டல்கள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக, சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள், ஹோட்டல்கள், நட்சத்திர விடுதிகள், கோவில்கள், தேவாலயங்கள், தலைமைச் செயலகம், டி.ஜி.பி அலுவலகம், ஆளுநர் மாளிகை, விமான நிலையம், ரயில்வே நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன.
இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குழந்தைகளின் கற்றலை சீர்குலைத்து, பள்ளிகளின் பாதுகாப்பு தொடர்பான பதற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதால் இந்த அச்சுறுத்தல்களை தீவிரமாக எடுத்துக்கொள்ளாமலும் இருக்க முடியவில்லை.
எப்படி விசாரிக்கப்படுகிறது?
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வந்த மிரட்டல்கள் காவல் நிலைய எல்லைகளுக்கு ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டு பின் அவை ஒரே வழக்காக இணைக்கப்பட்டது. இதேபோல வந்த சுமார் 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் மத்திய குற்றப்பிரிவில் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. வழக்கில் பல விசாரணை அதிகாரிகள் மாறியபோதும் மிரட்டல் விடுத்த மர்ம நபர்களில் ஒரு நபரை கூட, சென்னை காவல்துறையால் கைது செய்யமுடியவில்லை.
இந்த கதை நம்மூரில் மட்டும் நடப்பது அல்ல. உலகளவில் பள்ளி கல்லூரிகளுக்கு எதிரான வெடிகுண்டு மிரட்டல்களைச் சந்திக்கும் நாடாக அமெரிக்கா இருக்கிறது. ஆனால், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் இணையத்தை தவறான முறையில் சரியாகப் பயன்படுத்துவதால் அவர்களைக் கண்டறிவது கடினம் என்கின்றனர் வல்லுநர்கள்.. அமெரிக்காவிலும் இதுதான் நிலைமை.
இதனிடையே மிரட்டல் வந்த மெயில் நிறுவனத்திற்கும், பல சமூக வலைதள நிறுவனவங்களுக்கும் விவரங்கள் கேட்டு சென்னை காவல்துறை கடிதம் எழுதியது. மேலும், இந்தியா முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றப்பிரிவு போலீசார் மற்றும் இந்திய அளவில் பல ஏஜென்சிகளை ஒருங்கிணைத்து நாடு முழுவதும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் எனவும் சென்னை காவல்துறை தெரிவித்திருந்தது.
மிரட்டல்கள் தொடர்கதை
ஆனால், மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்கள் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். குறிப்பாக, அரசியல் பிரமுகர்கள், காவல்துறை IPS அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், IAS அதிகாரிகள் பெயர்களிலேயே மிரட்டல் விடுக்கத் தொடங்கினர். மர்ம நபர்களை கண்டறிவதில் சென்னை காவல்துறை பெரும் சவாலை சந்தித்து வந்தது. இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வழக்குகளை Anti Terrorism Squad (தீவிரவாத தடுப்புப் பிரிவு)-க்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மத்திய குற்றப்பிரிவில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. வழக்கில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், மத்திய குற்றபிரிவில் இருந்த அனைத்து வெடிகுண்டு மிரட்டல் வழக்குகளும் Anti Terrorism Squad - க்கு மாற்றப்பட்டு விசாரணையானது தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த ஐ.டி பெண் ஊழியர் ரினே ஜோஸ்லிடா, ஒரு தலை காதலால் காதலனை பழிவாங்க நாடு முழுவதும் 12 மாநிலங்களில் 21 வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு அகமதாபாத் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மாநில சைபர் கிரைம் போலீசார் அகமதாபாத் போலீசாரிடம் கைது செய்யப்பட்ட பெண் குறித்த விவரங்களை கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.