மணிப்பூர் | கார் மீது ஆயுதமேந்திய கும்பல் திடீர் தாக்குதல்.. 4 பேர் பலி!
மணிப்பூரில் அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய கும்பல் ஒன்று, வாகனம் மீது பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள மோங்ஜாங் கிராமத்தில்தான் இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது. இன்று பிற்பகல் 2 மணியளவில் பாதிக்கப்பட்டவர்கள் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அங்கே பதுங்கியிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 72 வயது பெண் உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
காரில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய ஒரு பெண் பின்னர் இறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இறந்தவர்கள் தஹ்பி (48), செய்கோகின் (34), லெங்கௌஹாவ் (35) மற்றும் பால்ஹிங் (72) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்திலிருந்து 12க்கும் மேற்பட்ட வெற்று குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், காவல்துறையினரும் கூடுதல் பாதுகாப்புப் படையினரும் அப்பகுதி விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். குக்கி போராளிக் குழுக்களிடையே நடந்து வரும் கோஷ்டி மோதலின் விளைவாக இது நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.