‘Captain Cool’ வாசகம்.. தோனி செய்த தரமான சம்பவம்!
இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றை எடுத்துக் கொண்டால், அதில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு எனப் பல பக்கங்கள் ஒதுக்கப்பட்டே ஆக வேண்டும். அந்தளவுக்கு சாதனைகளைப் படைத்தவர். குறிப்பாக, அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனாக தோனி வலம் வருகிறார். தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி, 2007இல் ஐசிசி டி20 உலகக்கோப்பை, 2011இல் 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013இல் ஐசிசி சாம்பியன்ஸ் ஆகியவற்றை கைப்பற்றி அசத்தியது.
தவிர, ஐபிஎல் அணிகளில் ஒன்றான சென்னை அணிக்கு 5 முறை கோப்பைகளைப் பெற்றுத் தந்தவர், அவர். இதனால் அவர் ‘கேப்டன் கூல்’ என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். ’கேப்டன் கூல்' என்ற சொற்றொடர் நீண்டகாலமாக கிரிக்கெட் களத்தில் தோனியின் அசாத்தியமான செயலுக்கு, குறிப்பாக பதற்றமான போட்டிகளின்போது ஏற்றதாக இருந்து வருகிறது. அதாவது, களம் பதற்ற நிலையில் இருந்தாலும், தோனி பொறுமையாகவும் மிகவும் கூலாகவும் இருப்பார். அதன் காரணமாகவே அவருக்கு இப்பெயர் நிலை பெற்றது.
இந்த நிலையில், 'கேப்டன் கூல்' என்ற அந்த வார்த்தையை ஒரு வர்த்தக முத்திரையாக தோனி பதிவு செய்துள்ளார். அதாவது, கிரிக்கெட் ரசிகர்கள் அன்பாக அழைக்கும், ‘கேப்டன் கூல்’ என்ற வாசகத்தை டிரேட்மார்க் (Trademark) ஆக பதிவு செய்ய தோனி விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பம் ஜூன் 5, 2023 அன்று இந்திய டிரேட்மார்க் ரிஜிஸ்ட்ரி மூலம் ஆன்லைனில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த டிரேட்மார்க் மூலம், தோனி தனது பிராண்ட் அடையாளத்தை பாதுகாக்கவும், வணிக வாய்ப்புகளை விரிவாக்கவும், குறிப்பாக விளையாட்டு பயிற்சி, ஆடை, மற்றும் டிஜிட்டல் துறைகளில் தனது பெயரைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.
இந்த டிரேட்மார்க்கிற்கு 2021-இல் பிரபா ஸ்கில் ஸ்போர்ட்ஸ் (Prabha Skill Sports) என்ற நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இதே பெயரை அந்த நிறுவனம் பதிவு செய்ய முயன்றது. ஆனால், தோனியின் புகழ், ஊடக கவரேஜ் மற்றும் ரசிகர்களின் அங்கீகாரம் காரணமாக, இந்தப் பெயர் தோனியுடன் மட்டுமே தொடர்புடையது என டிரேட்மார்க் ரிஜிஸ்ட்ரி ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் தோனியின் அனுமதி இல்லாமல் வேறு எந்த நிறுவனமும் வணிக நோக்கத்திற்காக இந்த வாசகத்தை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.