தவெக மாநாடு: ஓட்டைகளை அடைக்காமல் தேர்தல் வெற்றி சாத்தியமா?
தமிழ்நாட்டின் மாற்று சக்தி அல்ல.. நாமே முதன்மை சக்தி என்பதை உணர்த்துவோம் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார். அக்கட்சியின் ஒன்றரை ஆண்டு கால செயல்பாடுகளை ஒப்பிடுகையில் அது சாத்தியமாகுமா என்பது குறித்து பெருஞ்செய்தி பகுதியில் காணலாம்...
செய்தியாளர் சந்தானகுமார்
வி.சாலை எனும் வெற்றிச் சாலை என்ற முழக்கத்தோடு தனது முதல் மாநாட்டை நடத்தி, 'புதியதோர் விதி செய்வோம்' என அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கிய விஜய், தற்போது 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' என்ற தலைப்பில் இரண்டாவது மாநாட்டிற்குத் தயாராகிறார். முதல் மாநாட்டிற்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பும், நடிகர் என்ற பிம்பத்தால் மக்கள் திரண்டதும், தனியார் நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகளும் விஜய்க்கு சாதகமாக இருக்கலாம். ஆனால், கள யதார்த்தம் வேறுவிதமாக இருக்கிறது.
ஓட்டைகளை அடைக்காமல் தேர்தல் வெற்றி சாத்தியமா?
கட்சியின் முதல் மாநாட்டில் பூத் கமிட்டி, முகவர்கள், 28 அணிகள் என அடித்தளத்தைக் கட்டமைப்பதுதான் கட்சியின் முதுகெலும்பு என விஜய் பேசினார். ஆனால், ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் 60 சதவிகித கட்சிப் பணிகள் கூட முழுமையாக முடியவில்லை என தெரிகிறது. தூத்துக்குடி, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களிலும், சென்னையில் சைதாப்பேட்டை தொகுதியிலும் உட்கட்சிப் பூசல்களால் இன்னும் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. 28 அணிகளில், சில அணிகளுக்கு மட்டுமே மாநில அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஓட்டைகளை அடைக்காமல், அடுத்த தேர்தலை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.
அதேபோல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், பரந்தூர் போராட்டம், லாக்கப் மரணங்கள் என ஒருசில நிகழ்வுகளுக்கு மட்டுமே விஜய் வெளிப்படையாக எதிர்வினையாற்றி இருக்கிறார். சாதிய வன்முறையால் கொல்லப்பட்ட கவின் விவகாரத்தில் மௌனம், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை பனையூரில் கட்சி அலுவலகத்தில் சந்தித்தது, 13 நாட்கள் போராடிய தூய்மைப் பணியாளர்களையும் நேரில் செல்லாமல் அலுவலகத்திற்கு வரவழைத்து சந்தித்தது எனப் பல முக்கியப் பிரச்சினைகளில் விஜயின் நடவடிக்கை, கட்சிக்குள் மட்டுமின்றி, ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த காலங்களை உள்வாங்கியுள்ளாரா விஜய்?
1967, 1977 தேர்தல்களில் ஏற்பட்ட மாற்றங்களை அவ்வப்போது மேற்கோள் காட்டும் விஜய், அந்த மாற்றங்களுக்குப் பின்னால் திமுகவும், அதிமுகவும் செய்த களப்பணிகள், போராட்டங்கள், கூட்டணி வியூகங்கள் போன்றவற்றை உள்வாங்கியுள்ளாரா என்ற கேள்வி எழுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றைப் பொறுத்தவரை, ஜெயலலிதாவின் அதிமுகவைத் தவிர, எந்தக் கட்சியும் தனித்து நின்று வெற்றி பெற்ற சரித்திரமில்லை. விஜய்யின் புகழ், முக வசீகரம் மட்டுமே வாக்காக மாறும் என்று நம்புவது, கள யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது. அவர் எப்போது இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, முழுமையாக களத்திற்கு வருவார் என்பதுதான் தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியமான கேள்வி. சினிமா புகழ் என்பது வேறு, அரசியல் களம் என்பது வேறு. தவெக கட்டமைப்பிலுள்ள ஓட்டைகளையும், களப்பணிகளிலுள்ள இடைவெளியையும் விஜய் எப்படிச் சரிசெய்வார் என்பதைப் பொறுத்தே, அவர் எதிர்பார்த்திருக்கும் முதன்மை சக்தி கனவு நனவாகுமா என்பது தெரியும்.