அஜித் லாக்அப் மரணம்.. சரமாரி கேள்வி எழுப்பிய சீமான்!
மடப்புரம் இளைஞர் அஜித்குமார் தனிப்படை காவலர்கள் தாக்கி கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருப்புவனம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு 24 மணி நேரத்தில் கடிதம் கொடுத்து அனுமதி பெற்றுக்கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து கடிதம் கொடுக்கப்பட்டு காவல்துறை அனுமதி வழங்கிய நிலையில் அஜித்குமார் கொலைக்கு நீதிவேண்டியும், தொடரும் காவல்நிலைய படுகொலைகளை தடுக்கக்கோரியும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய சீமான், ”அஜித்குமார் படுகொலையில் பல நூறு கேள்விகள் எழுகிறது. அதை ஆட்சியாளர்களிடம் எழுப்ப வேண்டிய கடமை உள்ளது. நாம் எத்தனையோ குற்றவழக்குகளை பார்த்திருக்க முடியும்.குற்ற வழக்கை கொடுக்க வந்த ஒருவர் தன் முகத்தை மறைத்து பேசியதுண்டா? தன் நகை திருடியது குறித்த பேசிய நிகிதா ஏன் முகத்தை மறைக்க வேண்டும். உண்மை இருந்திருந்தால் ஏன் முகத்தை மறைத்துப் பேச வேண்டும்? நிகிதா என தெரிந்த பின்பு பல பேர் நிகிதா செய்த மோசடி குறித்து புகார் அளித்துள்ளனர். ஒரு இயக்கத்தை நடத்தி வரும் திருமாறனைக்கூட ஏமாற்றி 10 லட்சம் வாங்கித்தான் விட்டுள்ளார்.
ஒரு வழக்கில்கூட நிகிதா தண்டிக்கப்படவில்லை. இவ்வளவு பேரையும் நிகிதா ஏமாற்றி எப்படி வெளியே இருந்துள்ளார். காவல்துறை அவரை வெளியே சுதந்திரமாக விட்டுள்ளது. மோசடி செய்வதையே வேலையாக வைத்திருந்துள்ளார் நிகிதா. காவல்துறை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? நிகிதா பங்கு கொடுத்ததால்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகையை ஏன் வண்டியில் வைத்து சென்றாய். நகைக்காக உயிரையே எடுக்கும் நிலை வைத்த நிகிதா ஏன் வண்டியில் நகையை வைக்க வேண்டும்? எந்த காவல்நிலையம் சென்று நிகிதா புகாரளித்தார்? அஜித் இறந்த பிறகு நிதிதா புகார் அளித்துள்ளார். அதன்படி எப்ஐஆர் போட்டுள்ளார்கள். இப்படிப்பட்ட காவல்துறையை தான் முதல்வர் கையில் வைத்துள்ளார். முறைப்படி புகார் கொடுக்கப்படவில்லை. வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. என்ன நடந்தது? யார் யாருக்கு உத்தரவிட்டது? யார் முதல் குற்றவாளி என தெரிய வேண்டும்? யார் அடித்து விசாரிக்க சொன்னது? அந்த அதிகாரி யார் என தெரிய வேண்டும்?
சீருடை அணியாத காவலர்களை விசாரிக்க சொல்லி உத்தரவிட்டது எஸ்.பியா, டிஎஸ்பியா எந்த அதிகாரி? நகை திருட்டு வழக்கில் அடித்து விசாரிக்க என்ன தேவை. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பெண் நிகிதாவா. இவ்வளவு கடுமையாக விசாரிக்க அவசியம் என்ன? நிகிதா குறித்து இவ்வளவு பேர் புகார் கொடுத்த நிலையில் ஏன் இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை. நிகிதா பத்திரமாக கைது செய்யாமல் வைத்திருக்க காரணம் என்ன? முதல்வர், துணை முதல்வரை தெரியும் என சொல்லி ஏமாற்றிய பெண்ணை ஏன் கைது செய்யவில்லை? காவல் சித்திரவதை செய்யச் சொல்லி உத்தரவிட்ட உண்மையான குற்றவாளியை ஏன் காப்பாற்ற துடிக்கிறார்கள். நிகிதாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அஜித்குமாரை விசாரிக்க காரணம் என்ன?யார் யார் குற்றம் செய்வார்களோ, அவர்களையும், அடியாள் வேலை செய்பவர்களை மட்டுமே மேலிடத்தில் வைப்பார்கள். நேர்மையானவர்களை மேலிடத்தில் வைக்க மாட்டார்கள். சிபிஐயால் எந்த வழக்கில் நியாயம் கிடைத்திருக்கிறது? சிபிஐக்கு மாற்றி தன் காவல்துறை தோற்றதாக எண்ணி முதல்வர் பதவி விலக வேண்டும்.
நான் மாநில காவல்துறையை நம்புகிறேன். முதல்வர் அவர் கையில் வைத்துள்ள காவல்துறையை நம்பாமல் சிபிஐக்கு வழக்கை மாற்றி உள்ளார். குற்றம் நிருபணமான வழக்கில் இனி விசாரணை தேவையில்லை. நீதி மட்டுமே தேவை. நிகிதா பேசிய உயரதிகாரியும் அந்த உயரதிகாரி காவலர்களுக்கு உத்தரவிட்ட நிலையில் அந்த அதிகாரிதான் உண்மையான குற்றவாளி. எடப்பாடி, ஸ்டாலின் ஆட்சியில் யார் வேண்டுமானாலும் தப்பிக்கலாம்.
என் ஆட்சியில் ஒருநாள்கூட யாரும் தப்பிக்க முடியாது. நான் அஜித்குமார் சம்பவத்தை மறக்க மாட்டேன். ஒருநாள் நிச்சயமாக தவறு செய்தவர்களை அடித்துத் துவைப்பேன். இதை பிறந்த மண்ணில் நின்று சொல்கிறேன். ஆட்சி நிறைவடைய 6 மாதம் உள்ள நிலையில், ஓரணியில் வாங்க என அழைக்கிறார் ஸ்டாலின். திருடவும், கொள்ளையடிக்கவும், மண் வளத்தை சுரண்டவும், கனிமங்களை திருடவும் ஓரணிக்கு வாங்க என அழைக்கிறார் ஸ்டாலின். ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் 5 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை. அங்கு 1 மணி நேரம் மின்சாரத்தை அணைத்தவன் எவன்? என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். எல்லாவற்றுக்கும் பணம்தான் காரணம். திருடனுக்கு திருடன் பாதுகாப்பு. ’நான் அடிப்பதுபோல அடிக்கிறேன் நீ அழுவது போல அழு’ என திமுக, அதிமுக நாடகம் போடுகிறார்கள். இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கடைசி வரை போராடுபவன் நான். எனக்கு நீ வாக்களித்தால் வாக்கு செலுத்து. இல்லையென்றால் போ” என்றார்.