சித்திரவதையை தடுக்க 'அஜித்குமார்' பெயரில் சிறப்புச் சட்டம் வேண்டும்.. கூட்டியக்கம் கோரிக்கை!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த ஜூன் 28ஆம் தேதி, சிறப்புப் படையைச் சேர்ந்த காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் 28 வயதான அஜித்குமாரை தாக்கி கொன்ற கொடுஞ்சம்பவம், தமிழ்நாட்டை உலுக்கியிருக்கிறது. இந்த சம்பவம், தமிழக மக்களிடமும் அரசாங்கத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்ட அதிவேக நடவடிக்கைகள், விசாரணைகள் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தலையீடு குறித்து, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
அதே சமயம், இந்த விவகாரத்தில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் உட்பட எல்லா குற்றவாளிகளும் சட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டு, காலதாமதமின்றி நீதிநடத்து வைக்கப்பட வேண்டும் என்றும் கூட்டியக்கம் வலியுறுத்தியுள்ளது.
முந்தைய பல சம்பவங்களை சுட்டிக்காட்டும் கூட்டியக்கம், இது போன்று கொடுமைகள் மீண்டும் நிகழாமல் இருக்க, உறுதியான சட்ட நடவடிக்கைகள் தேவை எனக் கோரியுள்ளது. குறிப்பாக, 2020-ம் ஆண்டு சாத்தான்குளம் ஜெயராஜ் - பெனிக்ஸ் சம்பவம், 2022-ம் ஆண்டு விக்னேஷ், தங்கமணி, அப்பு ஆகியோரின் காவல் சித்திரவதை உயிரிழப்புகள், 41 கட்டளைகள் அடங்கிய சைலேந்திரபாபு வெளியிட்ட நிலைதரச் செயற்பாட்டு நடைமுறைகள் ஆகியவை நினைவூட்டப்பட்டுள்ளன.
இதிலிருந்து முக்கியமானது நிலைதரச் செயற்பாட்டு நடைமுறைகள் உள்ள இரண்டாவது கட்டளை தனிப்படை போலீசார் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது, திருப்புவனம் அஜித்குமார் கொலை சம்பவத்தில் மீறப்பட்டுள்ளதை கூட்டியக்கம் சுட்டிக் காட்டுகிறது.
மேலும், ஏஎஸ்பி பல்பீர்சிங் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை சித்திரவதை செய்ததாகும் புகாரும், அவருக்கான தண்டனை நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்களும், காவல் துறையினருக்கு வழங்கப்படும் குற்றவிலக்குரிமையின் விளைவாகவே காவல் கொடுமைகள் தொடர்கின்றன என்று கூட்டியக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தச் சூழலில், சித்திரவதை தடுப்பு சட்டம் தேவையானதாகும். இந்திய அரசால் தற்போது வரை ஐநா சித்திரவதை ஒப்பந்தத்திற்கு கையெழுத்து இட்டிருந்தாலும் ஏற்புறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு தனது வகையில் ஒரு முன்னோடியாகத் தன்னை நிலைநிறுத்தி, சித்திரவதையை தடுக்கும் சிறப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும், அதற்கு அஜித்குமார் சட்டம் எனப் பெயரிட வேண்டும் என்றும் கூட்டியக்கம் வலியுறுத்தியுள்ளது.
2023-ம் ஆண்டு ஜூன் 26 அன்று சித்திரவதைக்கு எதிரான ஐநா தினத்தில் மாநில மனித உரிமை ஆணையத்தில் நடந்த கூட்டத்தில் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியிருந்ததாகவும், அதில் தமிழக அரசுக்காக கலந்து கொண்ட அமைச்சர் மனோத் தங்கராஜ், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்ததாகவும் கூட்டியக்கம் குறிப்பிட்டுள்ளது. காவல் சித்திரவதையை தடுக்கும் சட்டத்தை இயற்றும் முயற்சியில் தமிழக அரசு முன்வந்தால், அதற்கான அனைத்து ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்க தயார் எனவும் கூட்டியக்கம் உறுதிகூறியுள்ளது.