அஜித் குமார் மரணத்தில் திடீர் திருப்பம்! புகார் கொடுத்த பெண் மோசடிப் பேர்வழியா? வெளியான பகீர் தகவல்
செய்தியாளர் பிரசன்னா
நகையைக் காணவில்லை
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்த அஜித் குமார் மீது நிகிதா கடந்த 27ம் தேதி புகார் ஒன்றை அளித்திருந்தார். இது குறித்து காவல்துறை நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “எனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஸ்கேன் எடுப்பதற்காக ஸ்கேன் சென்டருக்கு சென்றபோது எனது தாய் சாமி கும்பிடவேண்டும் எனக் கூறினார். அதனால், அருகில் இருந்த பத்ரகாளியம்மன் கோவிலுக்குச் சென்றோம். அங்கு வீல் சேர் எடுத்து வந்த காவலாளி அஜித் குமார், காரை பார்க் செய்துவிட்டு, வீல் சேர் எடுத்துவந்ததற்காக 500 ரூபாய் பணம் கேட்டார். நாங்கள் அவரோடு சண்டையிட்டு 100 ரூபாய் மட்டுமே பணம் கொடுத்தோம். மீண்டும் உணவு உண்ண சென்றோம். அப்போது காரின் பின்னிருக்கையில் இருந்த பேக்கை எடுக்கும்போதுதான் அதில் வைத்திருந்த செயின் உட்பட 10 சவரன் நகையைக் காணவில்லை என்பதை கவனித்து புகார் அளித்தோம்..” என புகார் மீது நடவடிக்கை வேண்டி காவல்துறைக்கு கோரிக்கை வைத்து வீடியோவில் பேசியிருந்தார்.
இந்நிலையில், நகை காணாமல் போனதாக எந்தவித எஃப்.ஐ.ஆரையும் பதிவு செய்யாமல், அஜித்தை அழைத்துச்சென்ற தனிப்படை காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வைத்து அவரைக் கொடூரமாகத் தாக்கியிருக்கின்றனர். இதில் அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் 6 காவல்துறை அதிகாரிகள் சஸ்பண்ட் செய்யப்பட்டனர். அதில், 5 பேர் பிரேதப் பரிசோசனை அறிக்கை வெளியானதும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
எழும் கேள்விகள்
இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக மாறியுள்ள நிலையில் காவல்துறையினர் எதற்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்?
எதற்காக காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்காமல் தனியாக வைத்து விசாரித்தனர்?
புகார் கொடுத்த பெண்மணி ஏன் தகவல்களை மாற்றி மாற்றி கூறி வருகிறார்?
அஜித் குமாரை சிறப்புப் படையிடம் ஒப்படைத்தது யார்?
அஜித் 2 நாட்கள் வேறுவேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?
மாஜிஸ்திரேட்டிக்கு உடனடியாக பிரேத பரிசோதனை அறிக்கை ஏன் அனுப்பப்படவில்லை?
உண்மையில் காருக்குள் நகை இருந்ததா?
நகையோடு எதற்கு காரை காவலாளியிடம் ஒப்படைத்தார்? என பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் புகார் கொடுத்த நிக்கிதா ஒரு மோசடி பேர்வழி என்னும் பிரத்தியேகத் தகவல் புதியதலைமுறைக்குக் கிடைத்துள்ளது.
புதிய புகார்
அதாவது நகை மாயமானதாகப் புகார் அளித்த நிகிதா மீது 2011 ஆம் ஆண்டு 16 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமங்கலம் தாலுகாவை சேர்ந்த ராஜாங்கம் என்பவர், அவரது உறவினர்களுக்கு அரசு பணியில் ஆசிரியர் வேலை மற்றும் விஏஓ வேலை வாங்கி தருவதாக கூறிய நிகிதா தனக்கு அப்போதைய துணை முதல்வரின் (2010-ல்) பிஏ உடன் நன்கு பழக்கம் இருப்பதாகவும் அவர் மூலமாக வேலை வாங்கி தருவதாக உத்தரவாதம் அளித்தும் 16 லட்சம் ரூபாய் பெற்றதாக புகார் அளித்துள்ளார். இறுதியில் வேலை வாங்கித் தராமல் நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னையும் தனது உறவினரையும் ஏமாற்றி விட்டதோடு பணத்தை திருப்பி தராமல் தலைமுறைவாகிவிட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் நிகிதா, அவரது குடும்பத்தை சேர்ந்த சிவகாமியம்மாள் , களியபெருமாள், கவியரசு, சகாதேவி, பகத் சிங் உட்பட 6 பேர் மீது அப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அவ்வழக்கில் சிவகாமி முதல் குற்றவாளியாகவும் நிகிதா 5வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டு எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த வழக்கின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை .
இந்நிலையில் புதியதலைமுறை செய்தியாளரிடம் அவர் பேசும்போது ஸ்கேன் செண்டருக்கு செல்லவில்லை எனவும் கோவிலுக்குதான் முதலில் சென்றோம் எனவும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்திருக்கிறார்
தற்போது வெளியாகியுள்ளா தகவலின் அடிப்படையிலும் கிடைத்திருக்ககூடிய எஃப் ஐ ஆரின் அடிப்படையிலும் நிகிதா ஏற்கனவே ஒரு மோசடி பேர்வழி என்பது அம்பலமாகியுள்ளது. யாரின் தூண்டுதலின் பேரில் தனிப்படை காவலர்கள் அஜித் குமாரை கொடூரமாகத் தாக்கி கொலை செய்தார்கள் என்னும் கேள்வி தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
”துணை முதல்வரின் பிஏ எனக்குத் தெரியும்”
இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய மாயவன் என்ற நபர், “அந்தக் காலக்கட்டத்தில் நான் பால் வியாபாரம் செய்து வந்தேன். என் மகன் பி.எட் கிருஷ்ணன் கோவில் அருகிலிருக்கும் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். அப்போது நிகிதா, வாத்தியார் வேலைகளுக்கு ஆட்களை எடுக்கிறார்கள். எங்களுக்கு கலைஞருக்கும் ஸ்டாலினுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறோம். எங்களால் முடியுமென சொன்னார்.
தெரிந்தவர்களாயிற்றே என நம்பி என் மகனுக்கு வேலை வாங்கிக் கொடுப்பதற்காக 8 லட்சம் பணம் கொடுத்தேன். மேலும், பேரனுக்கும் விஏஓ வேலை வேண்டி மேற்கொண்டு 8 லட்சம் கொடுத்தோம். டிஎஸ்பி அலுவலகத்திலும் புகார் அளித்தோம். விசாரிப்பதாகத்தான் சொன்னார்கள். ஆனால், விசாரணை எதுவும் நடக்கவில்லை.
வசதி வாய்ப்பு இல்லாத காரணத்தால் வழக்கை தொடர எங்களால் முடியவில்லை. பணம் கேட்டால் நிகிதாவின் அப்பா பேசுவார். தருகிறோம் என சொல்லுவார். நாங்களும் நம்பிக்கையோடு இருப்போம். ஒரு கட்டத்தில் அவர்கள் வீட்டில் இல்லை. அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, வேலை வாய்ப்பு இல்லை எனக் கூறி எங்களை மோசடி செய்துவிட்டார்கள். எங்கள் பணத்தை நிகிதாவிடம்தான் கொடுத்தோம்” எனத் தெரிவித்தார்.
500 நோட்டுகளாகத்தான் வேண்டும்
இதுதொடர்பாக ராஜாங்கத்தின் பேரன் பேசுகையில், “நிகிதா எங்களது மாமாவின் மாணவி. அதன் அடிப்படையில்தான் எனது மாமாவும் என்னிடம் கூறினார். நாங்களும் வெளியில் வட்டிக்குத்தான் அந்தப் பணத்தை வாங்கினோம்., 2011 ஆம் ஆண்டு 100 ரூபாய் நோட்டுக்களாகக் கொடுத்தோம். அதை 500 ரூபாய் நோட்டுக்களாக கேட்டார்கள். அதையும் மாற்றிக்கொடுத்தோம். 2 3 மாதங்கள் ஆனது.. மீண்டும் மீண்டும் கேட்டபோது, இது கலைஞரும் ஸ்டாலினும் நேரடியாகப் போடுவது,,. நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றார்கள். வேலை கிடைத்தால் போதும் என்ற ஆசையில்தான் நாங்கள் இருந்தோம். சில தினங்களுக்குப் பின் ஒரு வழக்கறிஞர் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக பணம் கேட்கக்கூடாது என மிரட்டினார். எங்களுக்குத் தெரிந்து இன்னும் நிறைய பேர் இவர்களால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
காவலாளி அஜித்குமார் மரணத்தை தாண்டியும் அந்த வழக்கு தொடர்புடையவர் குறித்து அதிர்ச்சியான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.