ஏழை நாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்திய அமெரிக்கா.. 1.4 கோடி மரணங்களுக்கு வாய்ப்பு!
ஏழை நாடுகளுக்கான உதவிகளை அமெரிக்கா நிறுத்தியதன் மூலம் ஒரு கோடியே 40 லட்சம் மரணங்களை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தரும் ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2ஆம் முறையாக பதவியேற்ற பின் ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கான நிதியுதவிகளை நிறுத்தினார். அமெரிக்க செயல்படுத்தி வந்த 83% திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் உணவு, மருத்துவம் உள்ளிட்ட உதவிகள் ஏழை மக்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு சர்வதேச பெருந்தொற்று அல்லது மிகப்பெரிய போரால் ஏற்பட்ட அழிவுக்கு இணையான பாதிப்பை ஏற்படுத்தும் என ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மருத்துவப் பேராசிரியர் டேவிட் ரசெல்லா நடத்திய ( Davide Rasella) ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகப்புகழ் பெற்ற மருத்துவ இதழான லான்செட் இந்த கட்டுரையை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் உதவிகள் மூலம் 2001ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஏழை மற்றும் நடுத்தர நாடுகளில் சுமார் 9 கோடி வாய்ப்புள்ள மரணங்கள் தவிர்க்கப்பட்டதாகவும் டேவிட் ரசெல்லா எழுதிய ஆய்வுக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. ஹெச்ஐவி, மலேரியா போன்ற நோய்களால் ஏற்படும் மரணங்களை அமெரிக்க உதவி கொண்டு பெருமளவு தடுக்க முடிந்ததாகவும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாடலை பயன்படுத்தி கணக்கீடுகள் செய்தால் 2025 முதல் 2030 வரை சுமார் ஒரு கோடியே 40 லட்சம் மரணங்களை தடுத்திருக்க முடியும் என்றும் ஆனால் அமெரிக்க நிதி நின்று விட்டதால் இதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஒரு கோடியே 40 லட்சம் பேரில் 45 லட்சம் பேர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளாக இருப்பர் என்பது பெரும் சோகம் என்றும் கூறுகிறது அந்த ஆய்வறிக்கை.