இங்கிலாந்து | 156 ஆண்டுகளாக இயங்கி வரும் அரச குடும்பத்தினருக்கான சிறப்பு ரயிலை நிறுத்த முடிவு!
இங்கிலாந்தில் 156 ஆண்டுகளாக இயங்கி வரும் அரச குடும்பத்தினருக்கான பிரத்யேக ரயில் சேவை நிறுத்தப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை மன்னர் மூன்றாம் சார்லஸ் வழங்கியுள்ளார். 1869ஆம் ஆண்டு மகாராணியாக இருந்த விக்டோரியா பயன்படுத்துவதற்காக 9 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது. ரயிலை பராமரிக்கவும் இயக்கவும் பெரும் செலவுகள் செய்ய வேண்டியுள்ளதால் இந்த முடிவெடுக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் மாளிகை நிதித்துறை அதிகாரி ஜேம்ஸ் சாமர்ஸ் தெரிவித்தார்.
இந்த ரயிலை பராமரிப்பதற்கான ஒப்பந்தம் 2027ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ள நிலையில் அதுவரை இச்சேவை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அரச குடும்பத்தினருக்காக ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் கோடி ரூபாயை அரசு ஒதுக்கிவரும் நிலையில் அது தேவையா என்று விவாதங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து அரச குடும்பத்தின் செலவுகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. எனினும் அரச குடும்பத்திற்கான மரியாதைகள், சலுகைகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் மக்கள் மத்தியில் குரல்கள் இருந்து வருகின்றன