\
25 Murders in 15 Days on TVK Vijay Govt Rule
cm vijayweb

தவெக ஆட்சி | 15 நாட்களில் 25 கொலைகள்.. பேசுபொருளாகும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப் போகிறார் விஜய்?

கோவையில் 10 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டது. இந்தச் சம்பவங்கள் எல்லாம் மாநிலம் தழுவிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.
Published on

தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்ற கடந்த 15 நாட்களில், 40க்கும் மேற்பட்டகடுமையான குற்றச் சம்பவங்களும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் நடந்துள்ளதாக, புதிய தலைமுறை செய்தியாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 15 தினங்களில் மட்டும் தமிழகத்தில் 25 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 இரட்டைக் கொலைச் சம்பவங்களில் 8 பேர்உயிரிழந்துள்ளனர். மேலும், கந்துவட்டிக் கொடுமையால் ஒருவரும், காவல் துறையினர் தாக்கிய குற்றச்சாட்டில் மற்றொருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுமட்டுமன்றி, 19 பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ குற்றங்களும், 9 கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களும், மதுபோதையால் ஏற்பட்ட 12 குற்றங்களும், 2 துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவற்றில் கணிசமான குற்றங்கள் மதுபோதையின் தாக்கத்தாலேயே நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

கடந்த மே 23 அன்று அதிகபட்சமாகத் தமிழ்நாட்டில் ஒரேநாளில் 9 குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பிராந்தியரீதியாகப் பார்க்கும்போது கோவையிலும், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தலா 6 குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

25 Murders in 15 Days on TVK Vijay Govt Rule
15 நாட்களில் 25 கொலைகள்.. என்ன செய்யப்போகிறார் முதல்வர் விஜய்..? பேசுபொருளாகும் சட்டஒழுங்கு!

திருவண்ணாமலை மாவட்டத்திலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் தலா 5 குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சென்னை மணலி புதூரில் 14 மணி நேர இடைவெளியில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டது, கோவில்பட்டி அருகே பேருந்து நிலையத்தில் காதலியின் கண்முன்னே காதலன் வெட்டிக்கொல்லப்பட்டது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் சிறுவன் வெட்டிக் கொல்லப்பட்டது, கோவையில் 10 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டது. இந்தச் சம்பவங்கள் எல்லாம் மாநிலம் தழுவிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சையின்போது செவிலியர் மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, "தவெக ஆட்சியிலும் எவ்வித மாற்றமுமில்லை" எனக் கூறி சக மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பேசுபொருள் ஆனது. முந்தைய திமுக ஆட்சி மீதான அதிருப்திக்கு, சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் காட்டிய அலட்சியமும் முக்கியக் காரணங்களில் ஒன்றாகப் பேசப்பட்டது. இந்த விமர்சனத்தை முதன்மைப் பிரசாரமாக முன்வைத்தே தவெக ஆட்சிக்கு வந்தது. இத்தகு சூழலில், குற்றச் சம்பவங்களைத் தடுத்துக் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருக்கிறது. முதல்வர் விஜய் இதற்கு என்ன எதிர்வினை ஆற்றுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

25 Murders in 15 Days on TVK Vijay Govt Rule
’இது தமிழ்நாடா, உ.பி.யா? இதுதான் உங்கள் மாற்றமா?’ - தவெக அரசை விமர்சித்த உதயநிதி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com