\
vijay, udhayanidhi
vijay, udhayanidhiweb

’இது தமிழ்நாடா, உ.பி.யா? இதுதான் உங்கள் மாற்றமா?’ - தவெக அரசை விமர்சித்த உதயநிதி!

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, கொலைச்சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல் விஜய் தலைமையிலான அரசை விமர்சித்துள்ளார்.
Published on
Summary

“இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?” என்று கேள்வி எழுப்பிய உதயநிதி, விஜயின் தேர்தல் வாக்குறுதி எங்கே போனது என விமர்சிக்கிறார். சூலூர் சிறுமி கொலை, விழுப்புரம் பாலியல் வன்கொடுமை, மதுரை சிறுவன் படுகொலை, பெரம்பூர் போதை கும்பல் அட்டூழியம் போன்ற சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையில், அரசு என்ன ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கிறது என அவர் நேரடி பதில் கோருகிறார்.

முதல்வராக விஜய் பொறுப்பேற்ற 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டை கொலைகள் மற்றும் பல்வேறு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது, 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்ற கேள்வியை பெரிதாக எழுப்புகின்றன.

CM Vijay
CM Vijay

ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்று தவெக பேசிவந்த நிலையில், குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளை ஒடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கேள்விகளை மக்களே எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.

இந்தசூழலில் விஜய் தலைமையிலான அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சித்துள்ளார்.

vijay, udhayanidhi
”பெண்களை அண்ணனாக பாதுகாப்பேன் என்ற வீரவசனம் என்னாச்சு..?” - டிடிவி தினகரன் விமர்சனம்

இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?

தமிழ்நாட்டில் நடக்கும் குற்றச்செயல்களுக்கு என்ன நடவடிக்கை என்ற கேள்வியை எழுப்பியிருக்கும் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை.

மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.

கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.

சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.

மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.

முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.

மாண்புமிகு முதல்வர் அவர்களே,

இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?

எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?

தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?

அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.

நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

vijay, udhayanidhi
15 நாட்களில் 25 கொலைகள்.. என்ன செய்யப்போகிறார் முதல்வர் விஜய்..? பேசுபொருளாகும் சட்டஒழுங்கு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com