ஓய்வு பெற்றார் தமிழ்நாடு ஜாம்பவான்.. பலரும் அறியாத விஜய் சங்கரின் மறுபக்கம்! அவரின் சாதனைகள் என்ன?
இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டிலும் ஐபிஎல்லிலும் இருந்து ஓய்வு அறிவித்த விஜய் சங்கர், சர்வதேச அளவில் முழுமையாக மலரவில்லை என்றாலும், தமிழ்நாடு கிரிக்கெட்டின் பொற்காலத்தை உருவாக்கிய ஆல்-ரவுண்டர் என நினைவுகூரப்படுகிறார். ரஞ்சி, விஜய் ஹசாரே, தியோதர், சையத் முஷ்டாக் அலி கோப்பைகளில் அவரது ரன்கள், பந்துவீச்சு, கேப்டன்சி தமிழ்நாட்டை மீண்டும் இந்திய கிரிக்கெட்டின் சக்திவாய்ந்த அணியாக மாற்றின.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தமிழ்நாடு உருவாக்கிய முக்கிய வீரர்களில் ஒருவருமான விஜய் சங்கர் அனைத்து விதமான இந்திய உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் அவர் மெதுவாக ஆடியதால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மேலும் கடந்த ஆண்டு CSK அணியில் அவர் பங்களிப்பும் பெரிதாக விமர்சிக்கப்பட்டதோடு, சமூக வலைத்தளத்தில் அவர் ஒரு ட்ரோல் மெட்டீரியலாக மாறினார்.
இந்திய அணியின் வீரராக அவர் சோபிக்கவில்லை என்றாலும் தமிழ்நாடு அணிக்கு அவர் செய்த செயல்கள் மகத்தானதாகும். சரிந்து கொண்டிருந்த தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் புகழை தூக்கி நிறுத்திய பெருமை விஜய் சங்கருக்கே சேரும்.
உள்ளூர் தொடர்களில் தனது சிறப்பான பங்களிப்பு காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போதிருந்து 2024-25 சீசன் வரை சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அணியின் தூணாகவும், நட்சத்திர ஆல்-ரவுண்டராகவும், வெற்றிகரமான கேப்டனாகவும் விஜய் சங்கர் வலம் வந்தார்.
அவர் தனது கரியரின் உச்சத்தில் இருந்த காலமே தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பொற்காலமாக திகழ்ந்தது. 2014-15 ரஞ்சி கோப்பை தொடரில் 777 ரன்கள் குவித்து ஆல்-ரவுண்டராக அசத்தினார். 2015-16 சீசனில் 54.12 என்ற மிகச் சிறந்த சராசரியுடன் (Average) 433 ரன்கள் குவித்தார். 2016-17 ரஞ்சி கோப்பை சீசனில் 6 போட்டிகளில் 47.71 என்ற சிறப்பான சராசரியுடன் மொத்தம் 334 ரன்கள் குவித்தார். அதோடு 130 கி.மி வேகத்தில் பந்துவீசி முக்கிய நேரத்தில் அணிக்கு விக்கெட் வீழ்த்தியும் கைகொடுத்தார்.
அவரின் இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக இந்திய ஏ அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. 2017 தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய ஏ அணியில் 5 போட்டிகளில் விளையாடிய விஜய் சங்கர், 91.00 என்ற அசாத்தியமான பேட்டிங் சராசரியை வைத்து இந்திய அணியை பல போட்டிகளில் வெல்ல வைத்தார்.
2019-ம் ஆண்டு இந்திய ஏ அணியில் இடம்பெற்று நியூஸிலாந்து சென்ற அவர், முதல் ஒரு நாள் போட்டியில், 88 பந்துகளில் 87 ரன்கள், இரண்டாவது போட்டியில், 56 பந்துகளில் 59 ரன்கள், மூன்றாவது போட்டியில் 42 ரன்கள் என 94 என்ற அசுர சராசரியை கொண்டிருந்தார். இந்த அசுரத்தனமாக செயல்பாடே அவருக்கு இந்திய அணியின் கதவை திறக்கவைத்தது.
2018 மார்ச் 6 அன்று இலங்கையில் நடந்த நிதாஸ் டிராபி (Nidahas Trophy) டி20 தொடரில், முதல்முறையாக இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பெற்றார். பின்னர் 2019 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்த போது, அனுபவமிக்க அம்பதி ராயுடுவை நீக்கிவிட்டு விஜய் சங்கரைத் தேர்வுக்குழு தேர்வு செய்தது.
ஆனால் இந்த தொடரில் அவர் காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். அதன் பின்னர் அவருக்கு ஏற்பட்ட தொடர்ச்சியான காயங்களால் அவர் பார்ம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் இந்திய அணியின் கதவுகளும் அவருக்கு மூடப்பட்டடது.
அதே நேரம் தமிழ்நாடு அணிக்காக அவரின் செயல்பாடுகள் முக்கியமானது. 2000 காலகட்டத்தில் தமிழ்நாடு அணி முக்கிய கோப்பைகள் எதுவும் வெல்லாமல் தவித்துக்கொண்டிருந்தது. ரஞ்சிக்கோப்பை, சையத் முஸ்தாக் அலி தொடர் என முக்கிய தொடர்களில் அரையிறுதிக்கு கூட செல்லாமல் தவித்து வந்தது. ஆனால் விஜய் சங்கரின் வருகைக்கு பின்னர் தமிழ்நாடு வலிமை பெற தொடங்கியது. 2014-15 ரஞ்சி கோப்பை தொடரில் 777 ரன்கள் குவித்து ஆல்-ரவுண்டராக விஜய் சங்கர் அசத்திய நிலையில், நீண்ட நாளுக்கு பின்னர் ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி வரை முன்னேறியது.
தொடர்ந்து 2016-17 சீஸனில் தமிழ்நாடு அணிக்கு தலைமையேற்று விஜய் ஹசாரே, தியோதர் கோப்பைகளை வென்று கொடுத்தார். அதே போல 2021-22 ஆண்டில் கேப்டனாக சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்று கொடுத்தார். அவர் தமிழ்நாடு அணிக்கு கேப்டனாக இருந்த காலங்களில் தமிழ்நாடு அணி குறைந்த ஓவர் போட்டிகளில் இந்தியாவையே நடுங்க வைத்து வெற்றிகரமான அணியாக இருந்தது. எனினும் இறுதிக்கட்டத்தில் தான் பார்மை இழந்து தவித்ததால், இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில், தமிழ்நாடு அணியில் இருந்து விலகி திரிபுரா அணியில் இணைந்தார். இந்த சூழலில் தனது 35வது வயதில் அவர் ஓய்வை அறிவித்துள்ளார்.
அதே நேரம் அவர் தனது சிறப்பான பார்மில் இருந்த போது காயங்கள் ஏற்படாமல் இருந்திருத்தால் அவர் இந்தியாவின் மிகசிறந்த வீரர்களில் ஒருவராக உருவாகியிருப்பார் என்பதே உண்மை.

