\
Who is Manav Suthar, the new spinner in Indian Test team
manav sutharx page

ரோகித், கோலிக்கு பயம் காட்டிய இளம் ஸ்பின்னர்.. இந்திய அணியில் இடம்.. யார் இந்த மானவ் சுதார்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தினார்.
Published on

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் ராஜஸ்தானைச் சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதார் இடம்பிடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி, அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. குறிப்பாக, அவ்வணி 1 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தநிலையில் இத்தொடருக்கான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளரான மானவ் சுதாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் வல்லுநர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது.

காரணம், ஐபிஎல்லில் கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றபோதும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. நடப்புத் தொடரிலும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். தவிர, 2025இல் இங்கிலாந்துக்குச் சென்ற இந்திய ஏ அணியில் அவர் இடம்பெற்றபோதும் களமிறங்கவில்லை. அதேபோல், கடந்த ஆண்டு நடைபெற்ற துலிப் கோப்பையில் மத்திய மண்டல அணியில் இடம்பிடித்தும் களமிறங்கவில்லை. ஆனால், கடந்த செப்டம்பரில் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட்ட அவர், 5 விக்கெட்களை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்தார்.

எனினும், அதைவைத்து மட்டுமே தேர்வாளர்கள் அவரைத் தேர்வு செய்யவில்லை என்கிறார்கள் வல்லுநர்கள். முன்னதாக, கடந்த 2023 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் ஆயத்தப் பயிற்சி முகாமுக்கு மானவ் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது பெங்களூருவில் நடைபெற்ற முகாமில் சேர்வதற்கு முன்பே, அவரைச் சுற்றி பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அந்த முகாமில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தினார். அதன் பலன்தான் இப்போது அவர் இந்திய அணியில் இடம்பிடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவருடைய பயிற்சியாளர் தீரஜ் சர்மா, “அவன் ஒரு பாரம்பரியமான பாணியில் உருவாக்கப்பட்டவன். அவன் பந்தை நேராகப் பாயும் பாதையில் வீசுபவன் அல்ல. ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளருக்குப் பொருத்தமான பந்துவீச்சு முறையும், பந்தை விடுவிக்கும் விதமும் அவனிடம் உள்ளது. பந்துவீச்சின் வேகம், மாறுபாடுகள், அல்லது தொடர்ந்து சவால்களை எழுப்பும் திறன் என எதுவாக இருந்தாலும், அது அவனிடம் இருக்கிறது” என்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com