ஆர்சிபிக்கு இருக்கும் பெரிய மைனஸ்.... சமாளித்துவிடுமா கோலி & கோ
pitch report
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
அகமதாபாத் மைதானம் குஜராத் அணியின் Home Ground ஆக மாறுவதற்கு முன்பு, ஐபிஎல்லில் ஏழாவது மற்றும் எட்டாவது சீசன்களில் ராஜஸ்தான் அணிக்கு Home Ground ஆக இருந்தது. இங்கு இதுவரை 45 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி 22 முறையும், இரண்டாவது முறையாக பேட்டிங் செய்த அணி 22 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரேஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இம்மைதானம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில், நடப்பாண்டில் இங்கு நடந்த எட்டு போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்துள்ள அணி 7 முறை 200 ரன்களைக் கடந்துள்ளன. எஞ்சிய ஒரு போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 196 ரன்களை எடுத்திருந்தது. குறிப்பாக, இங்கு நடந்த ஐந்தாவது லீக் போட்டியில் குஜராத்தை எதிர்த்து ஆடிய பஞ்சாப் அணி 5 விக்கெட்களை இழந்து 243 ரன்களைக் குவித்திருந்தது. இதுவே இம்மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். குறிப்பாக 47 பந்துகளில் 97 ரன்களைக் குவித்து ஸ்ரேயாஷ் ஐயர் ஆடிய ருத்ர தாண்டவமும் இம்மைதானத்தில்தான் நிகழ்ந்தது. அதேபோல், இம்மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 6 முறை வெற்றி பெற்றுள்ளன. ஆனாலும், டாஸ் வென்ற பெரும்பாலான அணிகள் சேஸிங்கைத் தேர்வு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
துவம்சம் செய்த ஸ்ரேயாஷ்
பெரிய மைதானம் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களும், மெதுவாகப் பந்துவீசக்கூடியவர்களும் பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியாக இருக்கலாம். மிகச்சிறந்த உதாரணம், 2023 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் குவாலிஃபயர் 2 வில் குஜராத் அணி மும்பை அணியை எதிர்த்து களம் கண்டது. இப்போட்டியில் மோகித் சர்மா 2.2 ஓவர்களில் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். அதில், 4 விக்கெட்கள் கேட்ச்களில் வந்தன.
நடப்பு சீசனில் பஞ்சாப் அணி இம்மைதானத்தில் 2 முறை விளையாடியுள்ளது. இரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயத்தில் இரு போட்டிகளிலும் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் தனது பேட்டிங்கின் மூலம் எதிரணியை துவம்சம் செய்துள்ளார். இது பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய ப்ளஸ் என்றால் மறுமுனையில் பெங்களூரு அணி நடப்பு சீசனில் இம்மைதானத்தில் இதுவரை ஆடவில்லை. இது ஆர்சிபிக்கு பெரிய மைனஸ் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது. ஆனால், வெளியூர்களில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளதால் அதே உத்வேகத்துடன் ஆர்சிபி களமிறங்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
மழைக்கு வாய்ப்பா?
பஞ்சாப் அணிக்கு எதிராக 35 ஆட்டங்களில் ஆடியுள்ள விராட்கோலி சராசரியாக 36 ரன்களை அடித்திருக்கிறார். ஆனால், தற்போதைய சீசனில் அவரது சராசரி 55.82 ஆக இருப்பதாலும், அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக டீசண்டான ரன்களை அடித்திருப்பதாலும் ஆர்சிபி அணி உற்சாகமாகவே களத்திற்கு வரும்...
குவாலிஃபயர் 2 போட்டியின்போது கனமழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதற்கு தாமதமானது. இன்றும் மழை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 62% மழை பொழிவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், மாலை 7 மணிக்குப் பின் மழை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.