பஞ்சாப் அணிக்கு புதிய தலைவலி.. கேள்விக்குறி ஆகிவிடுமா கோப்பை கனவு?
அர்ஷ்தீப் சிங் என்றாலே எதிரணிக்கு எப்போதும் கலக்கமாகத்தான் இருக்கும். அவர் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் அவரது அந்தஸ்து உயர்ந்து கொண்டே இருந்தது. பவர்ப்ளேவில் பந்துவீசி விரைவாக விக்கெட்களை வீழ்த்துவதாக இருக்கட்டும், டெத் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்துவதாக இருக்கட்டும்.. எதுவாக இருந்தாலும் அதில் அர்ஷ்தீப் சிங் டச் இருக்கும். பவர்ப்ளே, டெத் என இரு கட்டங்களிலும் அவரை விட அதிகமாக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்களைப் பார்ப்பது அரிது.
ஏனெனில், இன்ஸ்விங், அவுட் ஸ்விங், வேகம், மெதுவாக என பல வேரியேசன்களில் பந்து வீசி எதிரணிக்கு எப்போதும் தொல்லை தருவார். அதிலும், டி20 போட்டிகளில் இவரது 4 ஓவர்களை கடந்துவிட்டால் போதும், மீதமிருக்கும் 16 ஓவர்களில் அதிகபட்ச ரன்களை சேர்த்துக்கொள்ளலாம் என்பதுதான் எதிரணியின் திட்டமாக இருக்கும். ஐபிஎல்லிலும் சரி, சர்வதேச டி20 போட்டிகளிலும் சரி அறிமுகமான சில ஆண்டுகளிலேயே அவர் அடைந்திருக்கும் இந்த உயரம் அளப்பறியது. ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில், குறிப்பாக இடைநிறுத்தத்திற்குப் பின் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார் அர்ஷ்தீப் சிங்..
சொதப்பும் அர்ஷ்தீப்
2025 ஐபிஎல் தொடரில் 15 இன்னிங்ஸ்களில் 18 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவரது எகானமியும் 8.79 என்ற டீசண்டாகத்தான் உள்ளது. ஆனால், கடைசியாக பஞ்சாப் விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் ஒரு விக்கெட்டைக் கூட அர்ஷ்தீப் சிங் எடுக்கவில்லை. அதிலும், ராஜஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் 4 ஓவர்களை வீசி 60 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார்.
கடைசி ஐந்து போட்டிகளில் பவர்ப்ளேவில் 10 ஓவர்களை வீசியிருக்கிறார் என்றால் விக்கெட்டே எடுக்காமல் 109 ரன்களைக் கொடுத்திருக்கிறார். இது ஆர்சிபி அணிக்கு எதிராக பஞ்சாப் அணிக்கு பிரச்னைக்குறிய விஷயம். அதுமட்டுமின்றி, அவரது எகானமி கடைசி ஐந்து போட்டிகளில் 10.39 ஆக உள்ளது. இது உண்மையிலேயே சரிசெய்யப்பட வேண்டிய ஒன்று.. ஏனெனில் யான்சென் வேறு அணியில் இல்லாததால், கூடுதல் பொறுப்பு அர்ஷ்தீப் தலையில் விழுந்துள்ளது..
சமீபத்தில் பஞ்சாப் அணிக்காக விளையாடுவது குறித்துப்பேசியிருந்த அவர், பஞ்சாப் அணி ஐபிஎல்லில் தனது முதல் பட்டத்தை வெல்வதற்கு உதவுவதையும், வரும் காலங்களில் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக செயல்படவுமே விரும்புகிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.
இது ஒருபுறமிருக்க மறுபுறம் மிக வெற்றிகரமான தொடக்க ஆட்டக்காரர்களைக் கொண்டுள்ள அணி ஆர்சிபி.. பில் சால்ட்டும் விராட் கோலியும் இணைந்து நிலைத்துவிட்டால் எதிரணியின் பந்துவீச்சு ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். ஏனெனில், இருவரும் இணைந்து ஓவருக்கு 10.29 என்கிற ரன்விகிதத்தில் 175.9 ஸ்ட்ரைக் ரேட்டில் 387 ரன்களைக் குவித்துள்ளனர். சால்ட் களத்தில் இருக்கும் வரை, எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் தனக்கான நேரத்தை எடுத்துக்கொள்ளலாம். மேலும், ரிஸ்க் எடுக்காமல் ஆடலாம். ஏனெனில் சால்ட் பவுண்டரிகளை விரட்டிக்கொண்டே இருப்பார். சுழலாக இருந்தாலும் சரி, வேகப்பந்துவீச்சாக இருந்தாலும் சரி, சால்ட்டின் பாணி பேட்டை சுழற்றுவதுதான். ஆனால், ஒரே வித்தியாசம் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் மட்டுமே சால்ட் திணறியுள்ளார். இந்த ஆண்டில் நடந்த டி20 போட்டிகளில் ஆறு இன்னிங்ஸ்களில் சால்ட்டை நான்கு முறை அர்ஷ்தீப் அவுட்டாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, இடதுகை வேகப்பந்து வீச்சிற்கு எதிராக அவரது ஸ்ட்ரைக் ரேட் 155 எனும் அளவிலேயே உள்ளது. ஆனால், சமீபத்திய அர்ஷ்தீப்பின் ஃபார்ம் அவுட்தான் பஞ்சாப் அணிக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயத்தில் அர்ஷ்தீப்பிற்கு எதிரான விராட் கோலியின் நம்பர்கள் நன்றாகவே உள்ளன.. இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணி ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்றால் பவர்ப்ளேவில் கட்டாயம் விக்கெட்களை வீழ்த்தியே ஆக வேண்டும். அது அர்ஷ்தீப் கைகளில் உள்ளது. இல்லையெனில், சால்ட் களத்தில் இருக்கும் வரை பஞ்சாப் அணிக்கு கோப்பை நெடுந்தொலைவு தான்.