RCBயிடம் திணறும் பஞ்சாப் top order.. திட்டமிட்டுத் தூக்கும் ஹேசில்வுட்..
18 வருட ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கோப்பை வெல்லாத அணிகளில் ஒன்று இன்று கோப்பையை வெல்ல இருக்கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் இறுதியுத்தத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன..
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நான்காவது முறையாகவும் பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது முறையாகவும் இறுதிப்போட்டியில் விளையாட இருக்கின்றன.. லீக் சுற்றை பஞ்சாப் கிங்ஸ் முதலிடத்தில் முடித்திருந்தது என்றால், ஆர்சிபி இரண்டாம் இடத்தில் முடித்திருந்தது. இரு அணிகளும் பேட்டிங் பவுலிங் என அனைத்து துறைகளிலும் சமமான அணிகளாகவே இருக்கின்றன. ஆனால், ஆர்சிபிக்கு எதிரான போட்டிகளில் எல்லாம் பஞ்சாப் சற்று திணறியிருப்பதும் மறுக்க முடியாத உண்மை.
இந்த சீசன் முழுவதும் பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் அச்சமற்ற கிரிக்கெட்டையே ஆடி வந்துள்ளனர். கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைப் பார்த்ததுபோல் இருக்கிறது. அனைத்து பந்துகளும் சிக்சர்களுக்குப் பறக்க வேண்டும்.., உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை சொல்லலாம். குஜராத்துக்கு எதிரான போட்டியின்போது ஸ்ரேயாஷ்க்கு பந்து கிடைத்திருந்தால் அவர் சதம் அடித்திருக்கலாம். ஆனால் அவரோ ஷஷாங் சிங்கிடம் தனது சதத்தினைப் பற்றிக் கவலைப்படாமல், அனைத்து பந்துகளையும் பவுண்டரிகளுக்கு விரட்டுமாறு கேட்டுக்கொண்டார். இதுபோன்ற ஒரு கிரிக்கெட்டையே அவர்கள் சீசன் முழுவதும் ஆடியுள்ளனர்.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ப்ரியான்ஷ் ஆர்யா, ப்ரம்சிம்ரன், ஜாஷ் இங்லீஸ், ஸ்ரேயாஷ் ஐயர் என நால்வரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 160க்கும் மேல் இருக்கிறது. மிக வெற்றிகரமான டாப் ஆர்டரைக் கொண்ட அணியாகவும் பஞ்சாப் இருக்கிறது. இந்த சீசனில் 7 முறை 200+ ரன்களைக் குவித்துள்ளது பஞ்சாப் அணி. மற்ற அணிகளைப்போல் வெளிநாட்டு வீரர்களையோ அல்லது உள்நாட்டு சூப்பர் ஸ்டார்களையோ நம்பாமல் uncapped இந்திய வீரர்களை மட்டுமே நம்பிக் களமிறங்கியிருக்கிறது. ஒரு அணியில் இருக்கும் uncapped இந்திய வீரர்கள் நான்குபேர் இணைந்து 1519 ரன்களை தங்களது அணிக்காக அடிக்கின்றனர் என்றால் அணியில் அவர்களது பங்கு என்ன என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளலாம்.
இப்படி அனைத்து அணிகளுக்கும் எதிராக பட்டாசாக சிதறிய பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் ஆர்சிபிக்கு எதிராக மட்டும் சில்லு சில்லாக நொறிங்கிப் போகிறது. 38/4, 53/4, 76/4 என லீக் போட்டிகளில் பஞ்சாப்பின் டாப் ஆர்டரை சிதைத்திருக்கிறது ஆர்சிபி அணி. மிகவும் குறிப்பாக ஜாஷ் ஹேசில்வுட். back of length தாக்குதலின் மூலம் எதிரணியை நிலை குலையச் செய்வது ஆர்சிபியின் பலம் என்றால் பஞ்சாப் பேட்டர்கள் back of length பந்துகளுக்கே தங்களது விக்கெட்களை பறிகொடுத்துள்ளனர். இதுவே ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் திணறுவதற்கு காரணம் என்கின்றனர் வல்லுநர்கள்.
பஞ்சாப் அணியின் டாப் ஆர்டருக்கு ஹேசில்வுட் என்றால், மிடில் ஆர்டருக்கு சுயாஷ் சர்மா இருக்கிறார். நடப்பு தொடரில் இடது கை பேட்ஸ்மேன்களை விட வலது கை பேட்ஸ்மேன்களே சுயாஷ் சர்மா பந்து வீச்சுக்குத் திணறியுள்ளனர். அதிலும் பஞ்சாப் அணியின் வலது கைபேட்ஸ்மேன்களின் 5 விக்கெட்களை சுயாஷ் சர்மா வீழ்த்தியிருக்கும் நிலையில், அவர்களுக்கு எதிரான சுயாஷின் எகானமி 5.84 எனும் மிகச் சிறப்பான நிலையில் உள்ளது. மிக முக்கியமாக பஞ்சாப் அணியில் மிடில் ஆர்டரில் உள்ள ஒரே இடது கை பேட்ஸ்மேன் வதேரா மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணிக்கு ஒரே ஒரு ஆறுதல், நடப்புத் தொடரில் பெங்களூரு அணி அகமதாபாத்தில் இதற்கு முன் ஆடியதில்லை என்பதுமட்டுமே..
பஞ்சாப் அணியின் பேட்டிங்கோடு பெங்களூரு அணியின் பந்துவீச்சை ஒப்பிட்டுப்பார்த்தால் அனுபவத்தோடு, உச்சக்கட்ட ஃபார்மும் சேர்ந்திருக்கிறது. அணியில் 5 முதல் 6 பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர் என்றால் யாரொருவரும் எந்த ஒரு இடத்திலும் பந்துவீச முடியும். இதைத்தாண்டி பஞ்சாப் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், சாஹல், ஸ்டோய்னிஸ் என மூன்று பேர் மட்டுமே ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடியிருக்கின்றனர். இறுதிப்போட்டியில் இருக்கும் அழுத்தத்திற்கு மத்தியில் இளம் வீரர்களை வழி நடத்த வேண்டிய பொறுப்பு இம்மூவருக்கும் பெருமளவில் இருக்கிறது. 20 ஓவர்களும் அதிரடி என்று இல்லாமல், நிதானத்தைக் கைகொண்டு தேவைப்படும் நேரத்தில் அதிரடிக்கு மாறினால் தொடக்கத்திலேயே விக்கெட்களை விழுவதைத் தடுக்கலாம்... என்ன செய்யப்போகிறது பஞ்சாப்.. பொறுத்திருந்து பார்க்கலாம்.