Argentina ஜெர்சியில் கடைசி போட்டி.. நாளை விடைபெறுகிறார் 'மெஸ்ஸி'.. எப்போது, எங்கு LIVE பார்க்கலாம்?
அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடும் மெஸ்ஸி, அக்டோபர் 6 அன்று பெனினுக்கு எதிராக பியூனஸ் அயர்ஸில் பிரியாவிடை கூறுகிறார். இந்திய நேரப்படி அக்டோபர் 7 அதிகாலை 04.30 மணிக்கு நடைபெறும் இந்தப் போட்டி, அவரது பிரகாசமான கால்பந்து பயணத்தின் இறுதிப் பக்கம் ஆகும்.
மெஸ்ஸி என்னும் மாயாஜால கால்பந்தாட்டக்காரனின் பயணம் ஒவ்வொரு கால்பந்து வீரருக்கும் மட்டுமல்ல, ஒவ்வொரு சக மனிதனுக்கும் உத்வேகம் கொடுக்கக்கூடிய பயணமாகும்.. மந்திரப் புன்னகையாளன், காலசைவு வித்தகன், சாம்பியன் நாயகன் என உலக கால்பந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் லியோனல் மெஸ்ஸி, 2026 கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயினிடம் தோற்றதற்கு பிறகு சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஜாம்பவான் மாரடோனாவின் லெகஸியை 20 ஆண்டுகளாக தோளில் சுமந்த மெஸ்ஸி, தற்போது தென் அமெரிக்க சாம்பியன்களுக்கு ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், 85000 ரசிகர்கள், சக கால்பந்து வீரர்கள் மற்றும் முன்பு சேர்ந்து பயணித்த வீரர்கள் என அனைவரின் முன்னிலையிலும் பிரியாவிடை போட்டியில் பங்கேற்கிறார்.
நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் பெனினுக்கு எதிரான தனது பிரியாவிடை நட்புப் போட்டியுடன், தனது பிரகாசமான அர்ஜென்டினா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் மெஸ்ஸி. இதுவே தேசிய அணியான அர்ஜெண்டினாவுக்கு விளையாடும் கடைசி போட்டி மற்றும் கேப்டனாக வழிநடத்தும் கடைசி போட்டியாகும்.
ஒரு உலகக் கோப்பை பட்டம், இரண்டு கோபா அமெரிக்கா பட்டங்கள் மற்றும் ஃபைனலிசிமா ஆகியவற்றை வென்று உச்சபட்ச நட்சத்திர கால்பந்து வீரராக முடிக்கும் ஒரு அசாத்திய வீரனுக்கு, இந்தப் நட்புப் போட்டி ஒரு அடையாளப்பூர்வமான பொறுப்பு ஒப்படைப்பாக அமைகிறது. மேலும், மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக அதிக போட்டிகளில் பங்கேற்றவர் மற்றும் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையுடன் விடைபெறுகிறார். அவர் 207 ஆட்டங்களில் 125 கோல்களையும், 68 கோல் வாய்ப்புகளையும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,me
இந்திய நேரப்படி போட்டி எப்போது நடக்கிறது?
லயோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி போட்டியில், அக்டோபர் 6ஆம் தேதி அன்று விளையாடுவார். இந்திய நேரப்படி புதன்கிழமை, அக்டோபர் 7ஆம் தேதி அதிகாலை 04.30 மணிக்கு நடக்கிறது.
மெஸ்ஸியின் கடைசிப்போட்டி எந்த அணிக்கு எதிராக?
மூன்று முறை ஃபிஃபா உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி, உலகத் தரவரிசையில் 93-வது இடத்தில் உள்ள பெனின் அணியை எதிர்கொள்கிறது.
போட்டி எங்கு நடக்கிறது?
அர்ஜென்டினா அணிக்காக லியோனல் மெஸ்ஸியின் கடைசி சர்வதேசப் போட்டி, பியூனஸ் அயர்ஸில் உள்ள எஸ்டாடியோ மாஸ் மானுமென்டல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
மெஸ்ஸியின் கடைசிப் போட்டியை இந்தியாவில் பார்க்கலாமா?
அர்ஜென்டினா அணிக்காக லயோனல் மெஸ்ஸி விளையாடும் கடைசி சர்வதேசப் போட்டி, ஒரு FIFA சர்வதேச நட்புப் போட்டி என்பதால் இந்தியாவில் நேரலையாக ஒளிபரப்பப்படாது. இருப்பினும், இந்தியாவில் உள்ள ரசிகர்கள் இந்தப் போட்டியை ZEE5-ல் ஆன்லைனில் பார்க்கலாம்.

