\
messi - ronaldo
messi - ronaldoweb

இனி மெஸ்ஸி - ரொனால்டோ ஒப்பீடே அவசியமில்லை.. வெகுதூரம் பின்னுக்கு தள்ளப்பட்ட CR7!

மெஸ்ஸியா? ரொனால்டோவா? யார் தலைசிறந்த கால்பந்து வீரர் என்பதற்கான போட்டி இன்னமும் ரசிகர்களிடையே தீராமல் இருந்துவருகிறது.
Published on
Summary

2016-ல் ரொனால்டோ யூரோ கோப்பையை வென்றபோது ரொனால்டோவுக்கும் மெஸ்ஸிக்கும் இடையேயான தூரம் எட்டாத உயரத்திற்கு சென்றது. அப்போது ரொனால்டோ ஒரு முழுமையான வீரராகவும், அந்த ஆண்டு திடீர் ஓய்வை அறிவித்த மெஸ்ஸி முழுமை பெறாத ஒரு உயர்மட்ட வீரராகவும் மட்டுமே பார்க்கப்பட்டார். ஆனால் அடுத்த 10 ஆண்டுகள் அவற்றை அப்படியே தலைகீழாக மாற்றியுள்ளன..

இறுதியாக, கால்பந்து ரசிகர்களுக்கு அந்த மோசமான நாள் வந்துவிட்டது. லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துவிட்டார். பந்தின் மீதான அவரது கட்டுப்பாடு, ஆடுகளத்தின் இறுதி நேரத்தில் கோல் அடிக்கும் திறன், மற்றும் தனது சக வீரர்களை கோல் அடிக்க வழிவகுக்கும் ஆற்றல் என எல்லாமே ஒரு தெய்வீக அனுபவமாக இருந்தது. இந்த பயணத்தின் முடிவில் மெஸ்ஸி ஒரு முழுமையான கால்பந்து வீரராக முடித்துள்ளார். ஆனால் 2020 வரை அவர் இவ்வளவு பெரிய நட்சத்திரமாக உயர்ந்திருக்கவில்லை.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கத்தாரில் உலகக் கோப்பையை வென்றிருக்காவிட்டால், மெஸ்ஸி இன்று இருக்கும் இந்த பெரிய நட்சத்திரமாக மாறியிருக்க மாட்டார். சர்வதேச கால்பந்து வீரர்களை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் மிகப்பெரிய அளவுகோல், அவர்கள் எத்தனை லீக் பட்டங்களை வென்றிருக்கிறார்கள் அல்லது அந்த வெற்றிகளில் எத்தனை கோல்களை அடித்திருக்கிறார்கள் என்பதல்ல. அவர்கள் ஒரு உலகக் கோப்பையாவது வென்றிருக்கிறார்களா இல்லையா என்பதுதான் முக்கியம்.

மெஸ்ஸிக்காக அனுதாபப்பட்ட ரொனால்டோ!

2016-ல் ரொனால்டோ யூரோ கோப்பையை வென்றபோது, ​​அவரை விட மெஸ்ஸி பலமைல் தூரம் பின்தங்கியிருந்தார். அதிலும் 2016-ல் சர்வதேச ஓய்வை மெஸ்ஸி அறிவித்தபோது தனது 30களின் நடுப்பகுதியை நெருங்கியிருந்தார். அதனால் ​​என்னதான் நிறைய சாதனைகளை சாதித்திருந்தாலும், ஒரு கிளப்பின் சிறந்த வீரராக மட்டுமே மெஸ்ஸி ஓய்வுபெறுவார், ஒரு பெரிய கோப்பை வென்ற முழுமையான வீரராக முடிக்க மாட்டார் என்றே பார்க்கப்பட்டது.

2014 உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்வி, 2016 கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் தோல்வி என அடுத்தடுத்த 2 இதயம் நொறுங்கிய தருணங்களுக்கு பிறகு 2016-ல் கண்ணீருடன் ஓய்வை அறிவித்தார் மெஸ்ஸி. அப்போது மெஸ்ஸிக்காக வருத்தப்பட்ட ரொனால்டோ, “மெஸ்ஸி ஒரு கடினமான முடிவை எடுத்துள்ளார், அதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தோல்விகளுக்கும் ஏமாற்றங்களுக்கும், ஏன் இரண்டாம் இடம் பிடிப்பதற்குக் கூட அவர் பழகியவர் அல்ல. பெனால்டியைத் தவறவிடுவதால் ஒருவர் மோசமான வீரர் ஆகிவிட மாட்டார். மெஸ்ஸி கண்ணீர் விடுவதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது, அவர் தன் நாட்டிற்குத் திரும்புவார் என நம்புகிறேன், ஏனென்றால் அணிக்கு அவர் தேவை” என பேசியிருந்தார்.

messi & klose
messi & klose

அப்போது ரொனால்டோவிற்கு தெரியவில்லை அவர் மீண்டு வந்து அவரை விட பலமைல் தூரம் முன்னேறிச்செல்வார் என்று. 2020-க்குப் பிறகு, மெஸ்ஸியின் நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கியது. அடுத்த ஆண்டே, அவர் தனது முதல் கோபா அமெரிக்காவை வென்றார். ஆனால், யூரோ கோப்பையுடன் ஒப்பிடும்போது ரொனால்டோவே மெஸ்ஸியை விட முன்னிலையில் இருந்தார். பல சிறிய அணிகளே பங்கேற்பதால் கோபா அமெரிக்கா யூரோ கோப்பைக்கு நிகரானதாக பார்க்கப்படவில்லை. தொடர்ந்து மெஸ்ஸியை சுற்றி நிறைய கேள்விகள் எழுந்தன. ஆனால் 2022 உலகக்கோப்பையை வென்று அனைத்து விமர்சனங்களுக்கும் தன்னுடைய திறமையால் பதிலடி கொடுத்த மெஸ்ஸி, 2021-ஐ தொடர்ந்து 2024லும் கோபா அமெரிக்காவை வென்று 3 பெரிய கோப்பைகளுடன் ஓய்வை அறிவித்துள்ளார்.

என்ன செய்யப்போகிறார் ரொனால்டோ?

லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோவை வெகுதூரம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஓய்வை அறிவித்துள்ளார். 2026 உலகக்கோப்பையில் தனித்தனியாக சிறந்த வீரர்களுடன் களம்கண்ட போர்ச்சுக்கல், ஒரு அணியாக சேர்ந்து சிறப்பாக செயல்படவில்லை. மெஸ்ஸிக்காக அர்ஜெண்டினா அணி என்ன செய்ததோ, ரொனால்டாவுக்காக போர்ச்சுக்கல் அணி செய்யவில்லை என்பது வேதனைக்குரிய விசயமாகும். 2026 உலகக்கோப்பையில் கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ, அதுவே தன்னுடைய கடைசி உலகக்கோப்பை என்று தெரிவித்துள்ளார்.

ronaldo
ronaldopt web

ஆனால் இன்னும் சர்வதேச போட்டிகளிலிருந்து விடைபெறாத ரொனால்டோ, சொந்த மண்ணில் நடக்கவிருக்கும் அடுத்த உலகக்கோப்பையில் விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தசூழலில் தான் மெஸ்ஸியின் சர்வதேச ஓய்வு, ரோனால்டோ மீது பார்வைகளை திருப்பிவிட்டுள்ளது. CR7 சர்வதேச போட்டிகளிலிருந்து யூரோ கோப்பை உடன் விடைபெறுவாரா? அல்லது தன்னுடைய சொந்த மண்ணில் ஒருமுறை உலகக்கோப்பைக்காக முட்டிமோதுவாரா? முடிவில் என்ன செய்யப்போகிறார் ரொனால்டோ என்ற கேள்வி எழுந்துள்ளது..

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com