‘ரொனால்டோ மட்டுமே வீரர் இல்லை..’ பெரிதாக வெடிக்கும் ஜீசஸ் vs ரொனால்டோ மோதல்!
போர்ச்சுகல் அணியில் ரொனால்டோவின் பங்கு குறித்த கருத்து வேறுபாடு, பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் மற்றும் ரொனால்டோ இடையே மோதலை உருவாக்கியது. இதனால் ரொனால்டோ பயிற்சி முகாமிலிருந்து வெளியேறினார். இது அவரது கால்பந்து எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பயிற்சியாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பயிற்சி முகாமிலிருந்து வெளியேறினார், போர்ச்சுகல் அணி விளையாடவிருக்கும் நேஷனல் லீக் போட்டிகளில் தனது பங்கு மற்றும் அணித்தேர்வு குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்கு காரணம் எனத் தெரிகிறது. தான் வெளியேறியது குறித்த முழு உண்மையையும் உரிய நேரத்தில் வெளியிடுவதாகவும் சக வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் ரொனால்டோ தெரிவித்தார். எனினும் ரொனால்டோவின் கால்பந்து எதிர்காலம் குறித்த விவாதங்களையும் தொடங்கிவைத்துள்ளது.
முதலில் ரொனால்டோ உடன் என்ன பிரச்னை நடந்தது என்று குறித்து பேசிய பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ், ’என்னிடம் ஒரே ஒரு வீரர் மட்டும் இல்லை. 23 வீரர்கள் இருக்கிறார்கள். நான் இப்போது இங்கு இருக்க முக்கிய காரணம் ரொனால்டோ அல்ல. நார்வே மற்றும் டென்மார்க்குக்கு எதிரான போட்டியில் நீங்கள் விளையாடப் போவதில்லை என ரொனால்டோவிடம் நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அதுதான் சரியான முடிவு என நான் நம்பினேன், அதனால் அவரை விளையாட வைக்கவில்லை. ஆனால் போட்டியின் இறுதி நிமிடங்களில் அவர் தேவைப்படலாம் என நினைத்திருந்தேன். அதனால் அவரை வார்ம் அப் செய்ய கூறினேன். ஆனால் இறுதியில் நார்வே உடனான போட்டியின் சூழல் வேறு மாதிரி இருந்ததால் அவரை களமிறக்கவில்லை’ என கூறியதாக சொல்லப்படுகிறது.
ஆனால் வெளியாகியிருக்கும் வேறொரு தகவலின் படி, செவ்வாய்க்கிழமை இரவு கூட்டமைப்பின் தலைவர், பயிற்சியாளர் ஜீசஸ் மற்றும் கிறிஸ்டியானோ ஆகியோருக்கு இடையேயான ஒரு சந்திப்பு நடந்தது. அப்போது போட்டியின் போது கிறிஸ்டியானோவை 30 நிமிடங்கள் வார்ம்-அப் செய்ய வைத்து, அவரை ஆட்டத்தில் களமிறக்காததற்காக ஜார்ஜ் ஜீசஸ் அவரிடம் மன்னிப்பு கேட்டார். அவர் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டது மட்டுமல்லாமல், பொதுவெளியில் செய்தியாளர் சந்திப்பிலும் மன்னிப்பு கேட்பதாகவும், தனது தவறை ஒப்புக்கொள்வதாகவும் கூறினார். அதுதான் ஜார்ஜ் ஜீசஸ் கிறிஸ்டியானோவுக்கு அளித்த வாக்குறுதி. ஆனால் இறுதியில் அது நடக்காததால் பயிற்சியாளர் தன்னை சிறுமைப்படுத்த முயற்சித்ததாகவும் கோபமுற்ற ரொனால்டோ பயிற்சி அமர்வில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தசூழலில் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் பயிற்சியாளர்கள் ரொனால்டோவை அவமதிப்பது போல நடந்துகொள்வது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மறுபுறம் இது ரொனால்டோவின் நிரந்தர ஓய்விற்கு வழிவகுத்துவிடுமோ எனவும் ரசிகர்கள் தங்களுடைய அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

