WPL 2025 | ‘கில்லி’ ஆக வெடித்த ரிச்சா.. முதல் போட்டியிலேயே மகத்தான சாதனை.. கெத்து காட்டிய ஆர்சிபி!
RCBW vs GGW
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது மகளிர் ப்ரீமியர் லீக். முதல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. வதோதராவில் உள்ள கோதம்பி மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் லாரா மற்றும் தயாளன் ஹேமலதா என இரு விக்கெட்கள் அடுத்தடுத்து விழுந்தாலும் விக்கெட் கீப்பர் பெத் மூனி மற்றும் கேப்டன் கார்டனர் இணைந்து அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட்களை இழந்து 201 ரன்களைக் குவித்தது.
அதிகபட்சமாக பெத் மூனி 56 ரன்களை எடுத்த நிலையில், கார்ட்னர் 37 பந்துகளில் 8 சிக்சர்கள் உட்பட 79 ரன்களைக் குவித்தார். மகளிர் ப்ரீமியர் லீக்கில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிகசர்கள் அடித்தவர் என்ற சாதனையை சோஃபி டிவைனுடன் கார்ட்னர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
பெத் மூனி தான் விளையாடிய கடைசி 8 டி20 போட்டிகளில் 5 அரைசதங்களை அடித்துள்ளார். அதில் இருமுறை 97 மற்றும் 94 ரன்களை எடுத்துள்ளார். இன்றைய போட்டியிலும் அரைசதம் அடித்து அசத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பெங்களூரு அணியில் ரேணுகா சிங் 2 விக்கெட்களையும், கணிகா, ஜியார்ஜியா, ப்ரேமா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இமாலய இலக்கு
202 எனும் இமால இலக்கினைக் கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கம் அதிரடியாக அமைந்தாலும் கேப்டன் மந்தனா 9 ரன்களுக்கும் டேனியல் வைட் 4 ரன்களுக்கும் நடையைக் கட்டினர். முதல் ஓவரிலேயே ஆர்சிபி 13 ரன்களை எடுத்தது. சுழலுக்கு எதிராக திணறும் மந்தனாவிற்கு எதிராக கார்ட்னர் வந்தார். திட்டத்திற்கு கைமேல் பலன் கிடைத்தது. இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்திலேயே மந்தனா வெளியேற இறுதிப்பந்தில் டேனியல் வைட்டும் வெளியேறினார். டி20 போட்டிகளில் 26 இன்னிங்ஸ்களில் 9 முறை கார்ட்னர் பந்தில் ஸ்மிருதி மந்தனா வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின் வந்த எல்லிஸ் பெர்ரி அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். அவருக்கு ஏதுவாக ஆடிய ராகவி 25 ரன்களில் வெளியேற பெர்ரி 57 ரன்களை எடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார். இருவரும் அடுத்தடுத்து வெளியேற போட்டி கிட்டத்தட்ட குஜராத் பக்கம் சென்றுவிட்டதாகவே தோன்றியது. ஏனெனில், இருவரும் இணைந்து 86 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.
குஜராத் பந்துவீச்சை சிதறடித்த ரிச்சா
ஆனால், எதிர்பார்ப்புகளை பொய்யாக்கினார் ரிச்சா கோஷ். 16 ஆவது ஓவரை வீசிய கார்ட்னர் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தார் ரிச்சா கோஷ். 4 பவுண்டரிகள் ஒரு சிக்சர் என அந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள் கிடைத்தது. போட்டி ஆர்சிபி பக்கம் சென்றதும் அந்த ஓவரில்தான். அதன்பின்னர் ஆர்சிபி அணிக்கு ரன்கள் ராக்கெட் வேகத்தில் சென்றது.
அதிரடியாக ஆடிய ரிச்சா கோஷ் 23 பந்துகளில் 50 ரன்களை அடித்தார். தொடர் அதிரடி மூலம் 18.3 ஓவர்களில் ஆட்டத்தையே முடித்துவிட்டார் ரிச்சா கோஷ். கணிகாவும் ரிச்சா கோஷும் இணைந்து 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரிச்சா கோச்ஜ் மட்டும் 27 பந்துகளில் 64 ரன்களைக் குவித்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடக்கம். இந்த வெற்றியின் மூலம் மகளிர் ப்ரீமியர் லீக் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணியாக ஆர்சிபி மாறியுள்ளது.
மறுபுறம் குஜராத் அணி ஏகப்பட்ட கேட்ச்களைத் தவறவிட்டது. ரன் அவுட்கள் மிஸ்ஸாகின. ஓவர் த்ரோக்கள் மூலம் ஆர்சிபி அணிக்கு அதிக ரன்கள் கிடைத்தது. இவையாவும் தோல்விக்குக் காரணமாகின.. மேலும், குறிப்பாக ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடிபோட்டியாக இன்றைய போட்டி மாறியுள்ளது. ஏனெனில் இரு அணிகளும் சேர்ந்து 403 ரன்களைக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது,.
போட்டி முடிந்து பேசிய மந்தனா, “ரிச்சா பேட்டிங் செய்த விதம் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. முதல் இன்னிங்ஸிற்குப் பிறகு பனிப்பொழிவு இருந்ததால் ஆட்டம் எங்களுக்குச் சாதகமாக இருக்குமென நினைத்தோம்” எனத் தெரிவித்துள்ளார். ஆட்ட நாயகியாக ரிச்சா கோஷ் தேர்வு செய்யப்பட்டார்.