"ஆப்பரேஷன் பிரகத்" | சென்னையில் பதுங்கியிருந்த அசாம் மாநில தீவிரவாதி கைது!
அசாம் மாநில சிறப்புப்படை போலீசார் "ஆப்பரேஷன் பிரகத்" என்ற பெயரில் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த நபர்களை கைது செய்து வருகின்றனர்.
குறிப்பாக பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த தீவிரவாத குழுவான "அன்சருல்லா பங்களா" குழுவில் தொடர்புடையவர்களை தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுவானது அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையது என அசாம் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த குழுவை சேர்ந்தவர்கள் இதுவரை 16 நபர்களை அசாம் மாநில சிறப்பு படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறிப்பாக அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகிய இடங்களில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் அசாம் மாநில சிறப்பு படை அதிகாரிகள் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினருடன் இணைந்து ஆபரேஷன் ஒன்றை நிகழ்த்தியது. கடந்த புதன்கிழமை அதிகாலை இந்த தீவிரவாத குழுவின் முக்கிய நபரான "அபு சலாம் அலி" என்பவரை சென்னையில் அதிரடியாக கைது செய்தனர்.
குறிப்பாக சென்னை செம்மஞ்சேரி போலீசார் உதவியுடன் கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அசாம் துப்ரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் எனவும் இந்தப் பகுதியானது சர்வதேச எல்லை கொண்ட பகுதி என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் "அன்சருல்லா பங்களா" குழு மற்றும் "ஜமாத்துல் முஜாஹிதீன்" ஆகிய அமைப்புடன் இணைந்து அசாமில் செயல்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து சலாம் அலி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.
கைதான அபு சலாம் அலி தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நூர் இஸ்லாம் மண்டல் மற்றும் ஷாகினூர் இஸ்லாம் ஆகியோரிடம் சேர்ந்து தீவிரவாதத்தை வலுப்படுத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இந்திய இறையாண்மைக்கு ஆபத்தையும் ஒருமைப்பாட்டை குலைக்கும் வகையிலும், அமைதியை குலைக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இதேபோன்று கடந்த ஆண்டு கேரளாவிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணையின் மூலம் தீவிரவாத குழுவில் தொடர்புடைய நபர்கள் நாடு முழுவதும் எங்கெங்கு உள்ளார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் எட்டு நபர்கள் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஸ்லீப்பர் செல்கள் எனவும் மீதமுள்ள எட்டு நபர்கள் இந்தியாவில் உள்ள நபர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கைது செய்யப்பட்ட அபு சலாம் அலி தமிழ்நாட்டில் யாருடன் தொடர்பு உள்ளார்? மற்றும் "அன்சருல்லா பங்களாதேஷ்" குழுவுடன் தொடர்புடையுள்ள நபர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு குழு அதிகாரிகள், அசாம் மாநில சிறப்புப்படை அதிகாரிகளிடமிருந்து தகவல்களை பெற்று இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.