மகளிர் உலகக்கோப்பை ஃபைனல்| மழையால் ஆட்டம் பாதிப்பு.. போட்டி ரத்தானால் யாருக்கு கோப்பை?
2025 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. நவி மும்பையில் நடைபெறவிருந்த ஆட்டம் தாமதமாகி, டாஸ் போடப்படாமல் உள்ளது. மழை நீடித்தால், ரிசர்வ் நாளில் போட்டி நடைபெறுமா? இல்லையென்றால் முடிவு என்னவாக இருக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது..
2025 மகளிர் உலகக்கோப்பையானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.. அரையிறுதிப்போட்டிகளில் 4 முறை சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவும், 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தின..
இந்தசூழலில் இரண்டு அணிகளும் தங்களுடைய முதல் உலகக்கோப்பைக்காக இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், போட்டி நடைபெறவிருக்கும் நவி மும்பை மைதானத்தில் மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.. இன்னும் மழை இருந்துவரும் நிலையில் டாஸ் போடப்படமால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது..
ஒருவேளை மழையால் ஆட்டம் ரத்துசெய்யப்பட்டால் யாருக்கு அது சாதகமாக இருக்கும், அடுத்து என்ன நடக்கும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்..
மழையால் ரத்துசெய்யப்பட்டால் என்ன நடக்கும்?
2025 மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையே நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறவிருந்தது.. ஆனால் மழை காரணமாக போட்டி டாஸ் போடப்படுவதற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை நீடித்துவரும் நிலையில், ஒருவேளை போட்டி ரத்துசெய்யப்பட்டால் என்ன நடக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது..
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் நாளாக நவம்பர் 03-ம் தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது போட்டி நிர்ணயிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை எந்த ஆட்டமும் நடக்கவில்லை என்றால், இரண்டு அணிகளும் திங்கட்கிழமை மீண்டும் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும்..
ஒருவேளை ரிசர்வ் நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டு நடக்காமல் போனால் என்னவாகும்?, முடிந்தவரை இரண்டு அணிகளுக்கும் இடையே குறைவான ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்த போட்டி நடுவர்கள் முயற்சிசெய்வார்கள். குறைந்தபட்சம் இரண்டு அணிகளும் 20 ஓவர் கொண்ட போட்டியில் விளையாடவேண்டியது கட்டாயம்..
ஒருவேளை இது அனைத்தையும் கடந்து ரிசர்வ் நாளிலும் போட்டி நடக்காமல் போனால், இரண்டு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.. இதுபோன்ற சூழ்நிலையில் எந்த அணியும் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் போகும்..
1978 முதல் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுவரும் இந்திய மகளிர் அணி 47 ஆண்டுகளாக முதல் கோப்பைக்காக காத்திருக்கும் நிலையில், இப்படியான சூழல் ஏற்படக்கூடாது என்ற கவலையில் இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்..

