அஸ்வினுக்கு பதிலாக ஆஸ்திரேலியா பறக்கும் இளம் வீரர்.. யார் இந்த தனுஷ் கோட்டியான்?
அஸ்வினுக்கு பதிலாக தனுஷ் கோட்டியான்
சர்வதேச போட்டிகளில் இருந்து அஷ்வின் ஓய்வை அறிவித்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் அவருக்கு பதில் இளம் ஆல்ரவுண்டர் தனுஷ் கோட்டியான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடரின் நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஆல் ரவுண்டர் தனுஷ் கோட்டியான் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
யாரும் எதிர்பாராத வேளையில் இந்திய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வை அறிவித்தார். இதனால் பார்டர் கவாஸ்கர் கோப்பையின் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாட மும்பையைச் சேர்ந்த 26 வயதான இளம் வீரர் தனுஷ் கோட்டியான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதலில், அக்சர் படேல்தான் அணியில் இடம்பெற அழைக்கப்பட்டிருந்ததாகவும், குடும்ப சூழல் காரணமாக அணியில் இடம்பெற முடியாமல் போனது. இதனை அடுத்தே தனுஷ் கோட்டியானுக்கு அழைப்பு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாதித்தது என்ன?
தனுஷ் கோட்டியான் வலது கை ஆஃப்ப் ஸ்பின்னர். சமீபத்திய காலங்களில் பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார். 2024 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனுஷ் கோட்டியான் விளையாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023-2024 ரஞ்சி டிராபி தொடரில் தனுஷ் கோட்டியான் தொடர் நாயகன் விருதினை வென்றார். அந்தத் தொடரில் மொத்தமாக 29 விக்கெட்களையும், 502 ரன்களையும் எடுத்துள்ளார். ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாடும் அவர், அணியின் முக்கிய வீரராகவும் உள்ளார். ரஞ்சி டிராபி தொடரில் மட்டும் இதுவரை 2 சதங்கள், 13 அரை சதங்கள் உட்பட 1525 ரன்களை எடுத்துள்ளார்.
தற்போது விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடி வருகிறார். பாக்ஸிங் டே டேஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணியுடன் அவர் இணைவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இன்று (24/12/2024) மும்பையில் இருந்து புறப்பட்டு மெல்போர்ன் சென்றடைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அணியுடன் இணைந்தாலும், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா போன்றோர் காயம் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ விளையாட முடியாத பட்சத்தில்தான், தனுஷ் கோட்டியானுக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை 33 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள தனுஷ் கோட்டியான் ஆயிரத்து 525 ரன்களைக் குவித்துள்ளதோடு, 101 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது பேட்டிங் சராசரி 41.21 என்று மிகச்சிறப்பான ஒன்றாக இருக்கிறது.