அண்டை மாநில மருத்துவக் கழிவுகள்.. “உதவுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை” மாவட்ட ஆட்சியர்
அண்டை மாநிலங்களில் இருந்து மருத்துவக்கழிவுகள் மற்றும் திடக்கழிவுகளை தேனி மாவட்டத்தில் கொட்டுவோருக்கு உதவி புரிபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் சஜீவனா எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்டை மாநிலங்களில் இருந்து சட்ட விரோதமாக மருத்துவக்கழிவுகள், திடக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க, சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதுபோன்று கொட்டப்படும் கழிவுகளால் நீர்நிலைகள், விளைநிலங்கள் பாதிக்கப்படுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அண்டை மாநில கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதற்கும், வேறு வழியில் அப்புறப்படுத்துவதற்கும் மக்கள் துணை புரிய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள ஆட்சியர் சஜீவனா, இதுபோன்ற செயல்களுக்கு துணை புரிவோருக்கும், கழிவுகளை ஏற்றி வரும் வாகன உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.