100 சதங்கள் மைல்கல்லை எட்டுவாரா கோலி..? இருக்கும் சாத்தியக்கூறுகள் என்ன?
விராட் கோலி, 2008ஆம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமானார். 2027 உலகக்கோப்பை வரை விளையாட முடிவுசெய்திருக்கும் அவர், 100 சதங்களை எட்டுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறைந்தபட்சம் 45 ஒருநாள் போட்டிகளில் விளையாடினால், அவரால் 17 சதங்களை எட்ட முடியும். அவரது ஃபிட்னஸ் மற்றும் தேர்வுக்குழுவின் முடிவுகள் முக்கியம்.
செய்தியாளர் - சு.மாதவன்
19 வயது இளம் வீராக இந்தியா அணியில் 2008ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானர் விராட் கோலி. ஆரம்பத்தில் அவருக்கு ஒருநாள் போட்டியில் பெரும்பாலும் வாய்ப்பு கிடைக்காத போதிலும், எப்பொதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நன்கு விளையாடி இந்தியா அணியில் ஒரு முக்கிய வீராக உருவெடுத்தார்.
முதல் சதம் முதல் 84-வது சதம் வரை..
ஒருநாள் போட்டிகளில் 3வது வரிசை வீரராக விளையாடிவரும் விராட் கோலி, தனது முதல் சதத்தை 2009ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பதிவுசெய்தார். 316 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் கம்பீருடன் இணைந்து அணியை வெற்றிபெறச் செய்தார். அப்போட்டியில் 107 ரன்கள் விளாசியிருந்தார் கோலி.
அதன்பிறகு 2009ஆம் ஆண்டில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 போட்டியிலும் அறிமுகமாகி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் 2011ஆம் ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அறிமுகமான அவர், 3 வடிவத்திலும் கிரிக்கெட் விளையாடும் வீரராக தன்னை மெருகேற்றிக்கொண்டார்.
ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என அனைத்து பார்மேட்களிலும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கிங் கோலி, வேடிக்கையாக சதங்களை மலைபோல் குவித்தார். 2012ஆம் ஆண்டு ஒரே வருடத்தில் 5 ஒருநாள் சதங்களை அடித்த அவர், 2014ஆம் ஆண்டில் 4 டெஸ்ட் சதங்களை அடித்து உலக கிரிக்கெட்டையே திரும்பிபார்க்க வைத்தார். 2016-2019 வரையிலான காலகட்டம் தான் விராட் கோலியின் பொன்னான காலமாக இருந்தது. தன்னுடைய வாழ்நாள் ஃபார்மில் ஜொலித்த கோலி தொடர்ச்சியாக 3 ஆண்டுகளில் 6, 6, 5 என 17 ஒருநாள் சதங்களை குவித்தார். டெஸ்ட்டில் 8 சதங்களை அடித்தார்.
2022 ஆசியக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டியிலும் சதமடித்த கோலி, ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என 3 வடிவத்திலும் சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் தன்னை இணைத்துக்கொண்டார். மொத்தமாக 84 சதங்களை அடித்திருக்கும் கிங் கோலி ஒருநாள் வடிவத்தில் 53 சதங்கள், டெஸ்ட்டில் 30 சதங்கள் மற்றும் டி20-ல் ஒரு சதம் என விளாசியுள்ளார்.
100 சதங்களை எட்டுவாரா கோலி?
விராட்கோலி சச்சினின் 100 சதங்கள் என்ற இமாலய சாதனையை எட்டுவாரா என்றால் மிகவும் கடினமான ஒன்றுதான் என சொல்லவேண்டும். முன்பு அனைத்து பார்மேட்களிலும் விளையாடிய அவர், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிவருகிறார். மேலும் அவருக்கு தற்போது 37 வயதாகி விட்டதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரும் வேளையில் இறங்கிவிட்டது இந்திய அணியின் தேர்வுக்குழு.
ஆனால் 2027-ம் ஆண்டு நடக்க இருக்கும் உலக கோப்பை வரை விளையாட முடிவுசெய்திருக்கும் விராட் கோலி, தன்னுடைய ஃபிட்னஸ் மற்றும் தன்னுடைய ஃபார்மை தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் நிரூபித்துள்ளார். 3 ஒருநாள் போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் ஒரு அரைசதத்தை அடித்த கோலி ’வயசாகிடுச்சு’ என்று அவர்மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
கோலியின் உறுதியான மற்றும் அதிரடியான ஆட்டத்தை பார்த்த முன்னாள் வீரர்கள் 2016-ல் பார்த்த விராட் கோலியை போல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்திய முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர், விராட் கோலியால் நிச்சயம் சச்சினின் 100 சதங்கள் சாதனையை எட்டமுடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
சச்சினின் 100 சதங்களை கோலி முறியடிப்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்த கவாஸ்கர், "ஏன் கூடாது? அவர் இன்னும் மூன்று ஆண்டுகள் விளையாடினால், அவருக்கு இன்னும் 17 சதங்கள் தான் தேவை. அவர் பேட்டிங் செய்யும் விதத்தைப் பார்த்தால் அவரால் ஒரு தொடருக்கு 2 சதங்களை அடிக்க முடியும். நியூசிலாந்து தொடரில் சதத்தின் எண்ணிக்கை 86ஆக உயரும், இதில் கவனிக்க வேண்டியது அவருடைய பேட்டிங்கை அவர் ரசிக்கிறார். ஒரு பந்துகூட பேட்டின் விளிம்பில் படவில்லை, எதிரணியால் அவரை ஆட்டத்தில் இருந்து வெளியில் வைக்க முடியவில்லை” என்று பேசியிருந்தார்.
100 சதங்கள் அடிக்க இருக்கும் சாத்தியங்கள்..
விராட் கோலி 2027 உலகக்கோப்பை வரை விளையாட திட்டமிட்டிருக்கும் நிலையில், அதற்குள் இந்திய அணி உலகக்கோப்பையையும் சேர்த்து குறைந்தபட்சம் 45 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை விராட் கோலி 45 போட்டிகளிலும் விளையாடினால் நிச்சயம் அவரால் 17 சதங்களை எட்டிவிட முடியும். இது கடினமான காரியமாக இருந்தாலும், அவருடைய ஃபிட்னஸ் மற்றும் தேர்வுக்குழுவின் முடிவை சார்ந்தே இது இருக்கப்போகிறது.
குறைந்தபட்சம் 30 போட்டிகளில் விளையாடினால் அவரால் 2027 உலகக்கோப்பையை 92-94 சதங்களுடன் முடிக்க முடியும். அவர் எப்படி ஆடப்போகிறார், அவருடைய ஃபிட்னஸ் எப்படி இருக்கப்போகிறது.. 100 சதங்கள் என்ற இமாலய மைல்கல்லை எட்டமுடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

