சையத் முஷ்டாக் அலி | தொடரிலிருந்து வெளியேறிய தமிழ்நாடு அணி.. ஏன் தகுதிபெறவில்லை? என்ன காரணம்..?
சையத் முஷ்டாக் அலி 2025-26 தொடரில் குரூப் D பிரிவில் இடம்பெற்ற தமிழ்நாடு அணி, லீக் சுற்று முடிவில் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறாமல் தொடரிலிருந்து வெளியேறியது.
செய்தியாளர் - சு.மாதவன்
இந்தியாவில் ரஞ்சி தொடருக்கு அடுத்தப்படியாக உள்ள மதிப்புமிக்க கிரிக்கெட் தொடரான ‘சையத் முஷ்டாக் அலி’ டி20 தொடர் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்தொடரில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பங்குபெற்று விளையாடிவருகின்றன. இத்தொடரின் முதல் சாம்பியனாக தமிழ்நாடு அணி கோப்பையை தட்டிச்சென்றது.
ஆனால் அதன்பிறகு 15 ஆண்டுகளாக கோப்பையை வெல்லமுடியாமல் போராடிய தமிழ்நாடு அணி, 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி 2020-21 மற்றும் 2021-22 தொடரில் அடுத்தடுத்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
அதற்குபிறகு நடைபெற்ற நான்கு சையத் முஷ்டாக் அலி தொடர்களில் ஒன்றில் கூட காலிறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுலேயே வெளியேறியது.
2025-26 SMAT தொடரிலும் ஏமாற்றிய தமிழ்நாடு..
சையத் முஷ்டாக் அலி 2025-26 தொடரில் தமிழ்நாடு அணி குரூப் D பிரிவில் இடம்பெற்று 7 போட்டிகளில் விளையாடியது. இத்தொடரில் தமிழ்நாடு அணியை உலக தரவரிசையில் நம்பர் 1 டி20 பவுலராக இருக்கும் வருண் சக்கரவர்த்தி வழிநடத்தினார். சர்வதேச போட்டிகளில் வெற்றி கிடைத்த அவருக்கு, சையத் முஷ்டாக் அலி தொடர் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
நடந்துமுடிந்த ஏழு லீக் போட்டிகளில் தொடர்ந்து 2 தோல்வியை பெற்ற தமிழ்நாடு அணியால், கடைசி 5 போட்டியில் 3 ஆட்டத்தில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. இதனால் அடுத்த சுற்றான சூப்பர் லீக் சுற்றுக்கு தமிழ்நாடு தகுதி பெறாமல் போனது.
தமிழ்நாடு அணியின் மோசமான செயல்பாட்டுக்கு காரணம், அணியில் இருக்கும் முக்கிய வீரர்கள் அனைவரும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அடுத்தடுத்து 2 போட்டிகளில் அணி தோல்வி அடையும் போது, அதற்கு என்ன காரணம்? அதை எப்படி சரிசெய்வது போன்ற வழிமுறையினை கண்ட அறியாமல் சொதப்பினர். அடுத்தபடியாக வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடினால் தான், அணியினை நல்ல நிலைக்கு எடுத்து செல்ல முடியும். இப்படி தமிழ்நாடு அணி கூட்டாகவே சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. அணியில் திறமையான வீரர்கள் இருந்தும் அடுத்த சுற்றுக்கு முன்னேறமால் தமிழ்நாடு வெளியேறியது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த வரும் சையத் முஷ்டாக் அலி 2026-27 தொடரிலாவது தமிழ்நாடு அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

