கிரிக்கெட் மீதான காதலை கண்ணீரில் வெளிப்படுத்திய ஜாம்பவான்..சரித்திரத்தை சாதனைகளால் எழுதிய லாரா! #HBD

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மன்களில் லாராவும் ஒருவர். ஏனெனில் கிரிக்கெட் உலகில் அத்தனை சாதனைகளுக்குச் சொந்தக்காரர் லாரா.
பிரையன் லாரா
பிரையன் லாராpt web

டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆல் டைம் 11 என்ற ஒரு அணியை யார் உருவாக்கினாலும் அதில் லாராவின் பெயர் நிச்சயமாக இடம்பெற்றிருக்கும். மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மன்களில் லாராவும் ஒருவர். ஏனெனில் கிரிக்கெட் உலகில் அத்தனை சாதனைகளுக்குச் சொந்தக்காரர் லாரா. 90 களின் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற போட்டி சச்சினுக்கும் லாராவுக்கும் இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னர்கள், இந்த இருவரும்.

90 களின் டிசம்பரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் உலகிற்கு அறிமுகமானார் லாரா. ஆனால், லாரா டெஸ்ட் உலகை ஆளவந்தவர் என்பதை அப்போது பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். மொத்தமாக 131 டெஸ்ட்களை விளையாடியுள்ளார் லாரா. 232 இன்னிங்ஸ்களில் 11953 ரன்களைக் குவித்துள்ளார். அவரது சராசரி 52.88. டெஸ்ட் உலகில் ஒரு பேட்ஸ்மேனாக அதிகபட்ச ஸ்கோர் அடித்தவரும் அவர்தான். 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் 400 ரன்களை அடித்து நாட் அவுட்டாக இருந்தார் லாரா.

பிரையன் லாரா
‘இந்தியா அரையிறுதிக்கு முன்னேறாது..’! செமி பைனல் செல்லக்கூடிய 4 அணிகளை கணித்த மைக்கேல் வாகன்!

மூன்று தசாப்தங்களாக உடைக்க முடியாத சாதனை

அதற்கு முன்பும் கிட்டத்தட்ட 1994 ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 375 ரன்கள் விளாசி, அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார் லாரா. அப்போதும் புல்லரிக்க வைக்கும் சம்பவங்கள் நடந்தன. ஏனெனில்1958 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் கேரி சோபர்ஸ் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 365 ரன்களை எடுத்திருந்தார். அந்த சாதனை மூன்று தசாப்தங்களாக முறியடிக்கப்படாமல் இருந்தது. 1994 ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்து உடனான டெஸ்ட்டில் 24 வயது இளைஞர் ஒருவர் தனது 16 ஆவது டெஸ்ட் போட்டியில் அந்த சாதனையை தகர்த்தெறிவார் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த சாதனையை லாரா படைக்கும்போது சோபர்ஸ் ஸ்டாண்டில் இருந்தார். லாரா சோபர்ஸின் சாதனையை முறியடித்ததும் ரசிகர்கள் மைதானத்தில் குதித்தனர். தாங்களே அடித்தது போன்ற உற்சாகம் அவர்களுக்கு. அத்தனை பேரையும் அகற்றிவிட்டு ஆட்டத்தை மீண்டும் தொடங்க 20 நிமிடங்கள் ஆனது.

இதன்பின்னர் 2003 ஆம் ஆண்டு பெர்த்தில் நடந்த, ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹெய்டன் 380 ரன்கள் அடித்து லாராவின் சாதனையை முறியடித்தார். ஆனால் ஹெய்டன் சாதனையை அடுத்த ஆறு மாத காலத்திற்குள் லாரா 400 ரன்கள் அடித்து மீண்டும் முறியடித்தார். தற்போது வரை இதுவே உலகசாதனை.

பிரையன் லாரா
ரிங்கு மனம் உடைந்துவிட்டார்.. இனிப்பு, வெடி உடன் தயாராக இருந்தோம்! -எமோசனலாக பேசிய ரிங்கு சிங் தந்தை

”கவலை வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன்” - லாரா

அணியில் தூணாக செயல்பட்ட வீரர்கள் ஓய்வு பெறும் போது, அந்த அணி மீண்டும் தனது பழைய ஆட்டத்திற்கு திரும்ப சற்றே காலம் எடுத்துக்கொள்ளும். ரிச்சர்ட்ஸ், க்ரீனிட்ஜ் போன்ற மேற்கிந்திய ஜாம்பவான்கள் ஓய்வு பெறும்போதும் இதுவே நிகழ்ந்தது. அவர்களுக்குப் பிறகு ஒய்வுபெறுவதற்கான காலத்தை எட்டிக்கொண்டு இருந்த வீரர்களும் அணியில் இருந்தனர்.

அத்தகைய சூழலில் தான் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை எதிர்கொண்டது மேற்கிந்திய தீவுகள் அணி. முதல் டெஸ்ட்டை தடுமாறி சமாளித்து ட்ரா செய்தது மேற்கிந்திய தீவுகள் அணி. ஆனால் இரண்டாவது டெஸ்ட்டில் வார்னே என்ற சுழல் மாயாவி ஆஸ்திரேலிய அணியில் இருந்தார். மெல்போர்னில் இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் டெர்மூட் மற்றும் ஹூக்ஸ் மேற்கிந்திய தீவுகள் அணியை பொட்டலம் கட்ட, இரண்டவாது இன்னிங்ஸில் வார்னே அந்த பணியை மேற்கொண்டார். 23.2 ஓவர்களில் 52 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார் வார்னே.

பிரையன் லாரா
2வது முறை| ஐபிஎல் விதியை மீறும் ஹர்திக் பாண்டியா.. தண்டிக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்!

ஆனால், சிட்னியில் நடந்த மூன்றாவது டெஸ்ட்டில் ஆட்டம் ட்ரா ஆன போதும் ஆட்டத்தை தன் பக்கம் மாற்றி இருந்தார் லாரா. கிட்டத்தட்ட மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் என்றுதான் சொல்ல வேண்டும். 372 பந்துகளை எதிர்கொண்டு 277 ரன்களைக் குவித்திருந்தார். கிட்டத்தட்ட 38 பவுண்டரிகள்.

foxsports.com ஊடகத்திடம் இந்த டெஸ்ட் குறித்து பேசியிருந்த லாரா, “சிட்னி கிரிக்கெட் மைதானம், நாங்கள் அதிகம் விளையாடாத ஒரு மைதானம். அதேசமயத்திக் சுழலுக்கு சாதகமான மைதானம். இதன்காரணமாக ஆஸ்திரேலியாவின் கை சற்று மேலோங்கி இருந்தது. நாங்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தோம். எங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் சற்று பதற்றம் இருந்தது.

மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு விமானத்தில் சென்றது எனக்கு நினைவிருக்கிறது. நான் அணியின் மேலாளரிடம் கவலைப்பட வேண்டாம், நான் ஷேன் வார்னேவை எதிர்கொள்கிறேன் என கூறினேன். நான் கூறியது கர்வமாகத் தோன்றலாம். ஆனால் நாங்கள் அதிகளவு ஸ்பின் விளையாடுகிறோம். நான் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஷேன் வார்னேவிற்கு எதிராக அதிகம் ஆடவில்லை. ஆனால் அவரை எதிர்கொள்ள பழகி விட்டதாக உணர்ந்தேன்” என தெரிவித்துள்ளார்.

பிரையன் லாரா
CSK vs PBKS | “எங்க வெற்றிக்கு தல-தான் காரணம்..” CSK அணியை ட்ரோல் செய்த பஞ்சாப் கிங்ஸ்!

லாராவின் சாதனைகள்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஏகப்பட்ட போட்டிகளை தனியாளாக வென்று கொடுத்துள்ளார் லாரா. இதுவரை 299 ஒருநாள் போட்டிகளில் 10405 ரன்களைக் குவித்துள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 261 போட்டிகளில் 22 ஆயிரத்து 156 ரன்களைக் குவித்துள்ளார். இதிலும் 501 ரன்களைக் குவித்து நாட் அவுட்டாக இருந்து மகத்தான சாதனையை வைத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் மேல் லாரா வைத்திருக்கும் காதல் அளப்பறியது. உதாரணமாக ஒரு விஷயத்தைச் சொல்லலாம். கடந்த ஜனவரி மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வென்றாலும், காபாவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உயிரைக் கொடுத்து போராடி வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மைதானத்தில், கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பிறகு வீழ்த்தி, கிடைத்த வெற்றி. அந்த வெற்றியின் போது வர்ணனையாளர் பெட்டியில் இருந்த ப்ரைன் லாரா, கண்ணீர் சிந்திய நிகழ்வு காண்போரையும் கலங்க செய்தது.

வர்ணனையாளர் பெட்டியிலிருந்து பேசிய லாரா, “என்னால் நம்ப முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 27 ஆண்டுகள் ஆகிறது. இந்த இளம் அனுபவமற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, புது வரலாற்றை எழுதியுள்ளது!. (கண்ணில் கண்ணீருடன்) இந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று தலை நிமிர்ந்து நிற்கும். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் இன்று தலைநிமிர்ந்து நிற்கும். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் இன்று ஒரு மிகப்பெரிய நாள். ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள், இந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்ற ஒவ்வொரு உறுப்பினருக்கும் வாழ்த்துக்கள்!” என்று கண்ணீருடன் கூறினார். கிரிக்கெட் உலகின் ஆரம்பத்தில் உச்சத்தில் இருந்த ஒரு அணி, காலப்போக்கில் சிதைந்து உலகக்கோப்பைக்குக் கூட தகுதி பெறமுடியாமல் ஆனது. ஆனால் ஒரு வெற்றி அந்த அணியின் முன்னாள் ஜாம்பவானை கண்ணீர் சிந்த வைத்துள்ளது என்றால் காலம் எத்தனை மோசமானது. லாராவிற்காகவாவது மேற்கிந்திய தீவுகள் மீண்டெழ வேண்டும்,. வாழ்த்துகள் லாரா....

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com