பெங்களூர்|தெருநாய் கடித்து ரேபீஸ் நோய் பாதிப்பு.. சிகிச்சை பலனின்றி 4 வயது சிறுமி உயிரிழப்பு..!
பெங்களூருவில் தெருநாய்க்கடிக்கு உள்ளான நான்கு வயது சிறுமி ரேபீஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூரு தரவணகெரே பகுதியில் தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காதிரா பானுவை முகம் உட்பட பல பகுதிகளில் தெருநாய் கடித்தது. அப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு ரேபீஸ் நோய் ஏற்பட்டது. குடும்பத்தினர் 10 லட்சம் ரூபாய் வரை செல்வு செய்து பல மாதங்களாக சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் சிறுமி காதிரா பானு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
தாவணகெரே உள்பட பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை, பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 12 அன்று இந்தப் பகுதியில் காலை நடைக்குச் சென்ற இரண்டு மாணவர்களை தெருநாய்கள் கடித்தன. கடந்த மாதம் வீட்டைவிட்டு வெளியே வந்த 68 வயது முதியவர் தெருநாய்க்கடிக்கு ஆளானார் . கர்நாடக மாநில அரசு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி ஜூலை 31க்குள் கர்நாடகாவில் 2810000 பேர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளளனர். அதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதே போல கர்நாடகா மாநிலம் ஹாவேரியில் கடந்த ஆறு மாதங்களில் 3,237 பேரை தெரு நாய்கள் கடித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஹாவேரியில் ஹனகல், பையதகி, பன்காபுரா, சாவனுார், ஷிக்கான், ஹிரேகெரூர், ரட்டிஹள்ளி, குட்டாலா டவுன் ஆகிய பகுதிகளில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. தெருநாய்களை பிடிக்க வேண்டும் என நகராட்சி அலுவலகத்துக்கு மக்கள் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அச்சுறுத்தும் நாய்களை கட்டுப்படுவதில் ஏன் ஹாவேரி நகராட்சி அலட்சியமாக செயல்படுகிறது என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து பேசிய ஹாவேரி நகராட்சி மன்ற தலைவர் சசிகலா மல்கி, தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.