T20 WC| இந்தியாவிலிருந்து விலக வங்கதேசம் முடிவு.. ’அதற்கு வாய்ப்பே இல்லை..’ - பிசிசிஐ தரப்பு
வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஐபிஎல்லில் இருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளது. பிசிசிஐ தரப்பில், போட்டிகளை மாற்ற முடியாது எனவும், அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் நடந்துவரும் வன்முறை கலவரத்தில், இந்து மதத்தை சேர்ந்த 2 பேர் அடித்துக் கொல்லப்பட்டத்தை அடுத்து, இந்தியாவில் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன. இந்த எதிர்ப்பலைகள் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்க கூடாது என்றும், மீறினால் போட்டி நடத்தும்போது ஆடுகளத்தை பெயர்த்தெடுப்போம் என்றும் ஆன்மிக தலைவர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் அரசியல் தலைவர்கள் பல்வேறிடமிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன.
இந்தசூழலில் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூரை ரிலீஸ் செய்யுங்க என கேகேஆர் நிர்வாகத்திற்கு பிசிசிஐ அறிவுறுத்திய நிலையில், நேற்று அதிகாரப்பூர்வமாக முஸ்தஃபிசூர் ரஹ்மானை வெளியேற்றியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
இந்நிலையில் முஸ்தஃபிசூரை வெளியேற்றியதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம், இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை போட்டிகளிலிருந்து விலக முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஐபிஎல்லில் இருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் அவரசமாக கூட்டம் நடத்தி முக்கியமுடிவுகளை எடுத்துள்ளது.
இந்தசூழலில் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் வங்கதேச ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், அடிமைத்தனத்தின் காலம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், முஸ்தஃபிசூரை நீக்கியதற்காக பிசிசிஐ மற்றும் கேகேஆர் நிர்வாகத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் எழுதியுள்ளார். மேலும் இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை போட்டிகளை பாதுகாப்பு காரணம் கருதி இலங்கைக்கு மாற்ற வலியுறுத்தவேண்டும் என்று வாரியத்திற்கு அறிவுறுத்தியிருப்பதாகவும், ஐபிஎல் போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடைவிதிக்கவும் வலியுறுத்தியிருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் வங்கதேசத்தின் கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்களை அவமதிப்பதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் எழுதியுள்ளார்.
இதுகுறித்து தொடர் தொடங்க ஒருமாதமே உள்ள நிலையில் எதையும் மாற்றமுடியாது என பிசிசிஐ தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தகவலின் படி, "யாரோ ஒருவரின் விருப்பப்படி ஆட்டங்களை மாற்ற முடியாது. இதற்கு வாய்ப்பே இல்லை. எதிரணிகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர்களின் விமான டிக்கெட்டுகள், ஹோட்டல்கள் முன்பதிவு என அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. மேலும் எல்லா நாட்களிலும் தலா மூன்று ஆட்டங்கள் நடைபெறும், அதில் ஒரு ஆட்டம் இலங்கையில் நடைபெறும். அதற்கேற்பவே ஒளிபரப்பும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இதைச் சொல்வது மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது மிகவும் கடினம்" பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

