இந்தியாவிற்கு வங்கதேச அணி வராது.. ஐசிசி-க்கு வங்கதேச வாரியம் கடிதம்!
இந்தியாவில் முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஐபிஎல்லில் இருந்து வெளியேற்றியதை கண்டித்து, வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு கடிதம் எழுதி, இந்தியாவில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளது. இதனால், வங்கதேச அணியின் பாதுகாப்பு குறித்து வாரியம் கவலை எழுப்பியுள்ளது.
வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த 2 பேர் அடித்துக் கொல்லப்பட்டத்தை அடுத்து, இந்தியாவில் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன. இந்த எதிர்ப்பலைகள் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்க கூடாது என்றும், மீறினால் போட்டி நடத்தும்போது ஆடுகளத்தை பெயர்த்தெடுப்போம் என்றும் ஆன்மிக தலைவர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் அரசியல் தலைவர்கள் பல்வேறிடமிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன.
இந்தசூழலில் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூரை ரிலீஸ் செய்யுங்க என கேகேஆர் நிர்வாகத்திற்கு பிசிசிஐ அறிவுறுத்திய நிலையில், நேற்று அதிகாரப்பூர்வமாக முஸ்தஃபிசூர் ரஹ்மானை வெளியேற்றியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
இந்நிலையில் முஸ்தஃபிசூரை வெளியேற்றியதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம், இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க வரமாட்டோம் என தெரிவித்து ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளது.
ஐசிசிக்கு கடிதம் எழுதிய வங்கதேச வாரியம்..
முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஐபிஎல்லில் இருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் அவரசமாக கூட்டம் நடத்தி முக்கியமுடிவுகளை எடுத்துள்ளதாக முன்பு தகவல் வெளியானது.
சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்த வங்கதேச ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், அடிமைத்தனத்தின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. முஸ்தஃபிசூரை நீக்கியதற்காக பிசிசிஐ மற்றும் கேகேஆர் நிர்வாகத்தை வன்மையாக கண்க்கிறேன். இந்தியாவில் நடக்கும் வங்கதேசத்தின் உலகக்கோப்பை போட்டிகளை பாதுகாப்பு காரணம் கருதி இலங்கைக்கு மாற்ற ஐசிசியிடம் வலியுறுத்த கூறியிருக்கிறேன். ஐபிஎல் போட்டிகளையும் வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடைவிதிக்க கூறியிருக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.
இந்தசூழலில் தான் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு முக்கிய கடிதம் ஒன்றை முறையாக சமர்ப்பித்துள்ளது. அக்கடிதத்தில், "தற்போதைய சூழ்நிலை மற்றும் இந்தியாவில் வங்கதேச அணியின் பாதுகாப்பு குறித்து வளர்ந்து வரும் கவலைகளைத் தொடர்ந்து, வங்கதேச அரசாங்கத்தின் ஆலோசனையைக் கருத்தில் கொண்டு, தற்போதைய சூழ்நிலையில் வங்கதேச கிரிக்கெட் அணி போட்டிக்காக இந்தியாவுக்கு பயணம் செய்யாது என்று இயக்குநர்கள் குழு முடிவு செய்தது.
வங்காளதேச வீரர்கள், அணியின் அதிகாரிகள் மற்றும் வாரிய உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அணி பாதுகாப்பான சூழலில் போட்டியில் பங்கேற்க முடியும் என்பதை உறுதி செய்யவும் இதுபோன்ற ஒரு நடவடிக்கை அவசியம் என்று வாரியம் நம்புகிறது. ஐ.சி.சி இருக்கும் நிலைமையைப் புரிந்துகொண்டு இந்த விஷயத்தில் விரைவாக பதிலளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசியின் முடிவை பொறுத்தே வங்கதேச அணி இந்தியாவிற்கு வந்து விளையாடுமா அல்லது வேறு இடத்திற்கு போட்டி மாற்றப்படுமா என்பது உறுதிபெறும். 2026 டி20 உலகக்கோப்பையில் வங்கதேச அணியின் போட்டிகள் இந்தியாவில் கொல்கத்தா மற்றும் மும்பையில் நடக்க திட்டமிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

