”எல்லோரும் தோனியை சிறந்த கேப்டன் என்று சொல்வார்கள்; ஆனால், ரோகித் சர்மாவிடம்..” - அஸ்வின் புகழாரம்!

ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து அஸ்வின் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
தோனி, ரோகித், அஸ்வின்
தோனி, ரோகித், அஸ்வின்ட்விட்டர்

’அஸ்வினை களமிறக்கி இருக்க வேண்டும்’

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் மீண்டும் கோப்பையை இழந்தது இன்னும் விமர்சனமாகவே இருக்கிறது. இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்தபடியே உள்ளன. இந்த விமர்சனத்தின் ஒருபகுதியாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சிறப்பாக விளையாடக்கூடிய, தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினை களமிறக்கி இருக்க வேண்டும்’ என்கிற கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.

ashwin - rohit
ashwin - rohit

அஸ்வினை, திட்டமிட்டே ரோகித் ஓரங்கட்டுகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டதுடன், அதற்கு உதாரணமாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்காததையும் எடுத்துக் காட்டினர். இந்த கருத்து உலக அளவில் பேசுபொருளான நிலையில், ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து அஸ்வின் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”விராட் கோலியிடம் கிரிக்கெட் பசி அதிகம் இருக்கிறது; அவர் இன்னும் விளையாட வேண்டும்” - சச்சின்

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அழுகை

இதுகுறித்து அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், ”உலகக் கோப்பைத் தோல்விக்குப் பிறகு நாங்கள் மிகுந்த வலியில் இருந்தோம். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அழுதுகொண்டிருந்தனர். அவர்களைப் பார்ப்பதற்கே கடினமாக இருந்தது. இந்திய அணி மிகவும் அனுபவம் வாய்ந்தது. ஒவ்வொரு வீரருக்கும் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். இந்திய அணி நடப்பு உலகக் கோப்பையை வெற்றிபெறாவிட்டாலும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு பெருமை சேர்த்தனர்.

இந்திய கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால், ’அனைவரும் மகேந்திர சிங் தோனி மிகச்சிறந்த கேப்டன்’ எனக் கூறுவார்கள். ஆனால், ரோகித் சர்மா மிகவும் சிறப்பானவர். அவருக்கு என்று தனித்துவமான ஸ்டைலில்தான் கேப்டன்சியை மேற்கொள்கிறார். மேலும் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரின் உணர்வுகளையும் அவர் புரிந்துகொள்வார். வீரர்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது, அவர்களின் ரோல், திறமை என அனைத்தும் அவருக்குத் தெரியும். ஒவ்வொரு வீரர் குறித்தும் அறிந்துகொள்ள அவர் நிறைய முயற்சி எடுப்பார். தூக்கத்தை தொலைத்துவிட்டு ஆலோசனையில் ஈடுபடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம்.. கபில் தேவ் சொல்வது என்ன?

”ஃபைனலில் விளையாட 3 நாட்கள் முன்பே தயாரானேன்”

முன்னதாக, “நான் ரோகித் சர்மாவின் இடத்தில் இருந்து பார்த்தால் வெற்றி நடை போட்டு வரும் அணியை மாற்றுவதைப் பற்றி 100 முறை யோசித்திருப்பேன். ஏனெனில் ஏற்கனவே இருந்த கலவை அணிக்காக சிறப்பாகச் சென்றது. உண்மையாக ரோகித் சர்மாவின் எண்ணங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஃபைனலில் விளையாடுவது மிகப்பெரிய வாய்ப்பாகும். அதற்கு நானும் 3 நாட்கள் முன்பிருந்தே தயாரானேன். அதேசமயம் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனால் இந்தியாவுக்காக வெறித்தனமாக கொண்டாடி ஆதரவு கொடுப்பதற்காக மனதளவிலும் தயாரானேன்” என்று தெரிவித்திருந்தார், அஸ்வின்.

தென்னாப்பிரிக்காவுக்கான டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு இடம்

அஸ்வின் இப்படிப் பேசியிருப்பது தொடர்பாக தமிழக ரசிகர்கள் சிலர் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். அவருக்கு, தோனி சென்னை அணியில் இடம் வழங்கவில்லை என்பதற்காகத்தான் இப்படி கருத்து சொல்லியிருக்கிறார் என்றும், இனிவரும் சர்வதேச போட்டிகளில் தாம் விளையாட வேண்டும் என்பதற்காகத்தான் ரோகித்தைப் புகழ்ந்து வருகிறார் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர், உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடாதது குறித்து உள்ளுக்குள் வருத்தம் இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தென்னாப்ரிக்க தொடர் : 3 அணிகளுக்கு, 3 வித கேப்டன்கள் அறிவிப்பு! ஒயிட் பாலில் ரோகித், கோலிக்கு ஓய்வு!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com