இந்தியா வெல்ல ‘பிட்ச் டேம்பரிங்’ செய்த BCCI..? நாசர் ஹுசைன் பேசியதாக வீடியோ வைரல்! உண்மை என்ன?
அகமதாபாத்தில் நடைபெறும் டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு ஏற்றதாக மைதானத்தை மாற்றியதாக நாசர் ஹுசைன் குற்றம்சாட்டிய வீடியோ வைரலாகியுள்ளது. இது கிரிக்கெட்டின் உணர்வுக்கு எதிரானது எனவும், உலகக்கோப்பை இந்தியாவில் நடக்கக் கூடாது எனவும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான டி-20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. 2023ஆம் ஆண்டில் இதே நரேந்திர மோடி மைதானத்தில் ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் உலகக்கோப்பையை இழந்த இந்திய அணி, தற்போது அதே மண்ணில் டி20 உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது.
இந்தியா-நியூசிலாந்து இறுதிப்போட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சொந்தமண்ணில் இந்தியா தோற்கக்கூடாது என்பதற்காக இறுதிப்போட்டி நடக்கும் ஆடுகளத்தை பிசிசிஐ மாற்றியதாக குற்றஞ்சாட்டி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பிட்ச் டேம்பரிங் செய்ததா பிசிசிஐ..?
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் பேசியதாக வைரலாகி வரும் வீடியோவில், “அகமதாபாத்தில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் மைதானத்தை இந்திய அணிக்கு ஏற்றதாக மாற்ற அவர்கள் முயற்சிப்பதாக எனக்குச் செய்தி வந்துள்ளது. அதிகாலை 1 அல்லது 2 மணிக்கு மக்கள் மைதானத்திற்கு வெளியே கூட இருந்தனர். மைதானத்தில் ஏதோ செய்கிறார்கள்! அவர்கள் உண்மையில் ஆடுகளத்தை சேதப்படுத்துகிறார்கள்.
உண்மையிலேயே ஏதோ நடக்கிறது. இது கிரிக்கெட் அல்ல. இது ஒரு சூழ்ச்சி. விளையாட்டின் உணர்வு முகத்தில் அறையப்படுகிறது. உண்மையைச் சொன்னால், உலகக் கோப்பை இந்தியாவில் நடந்திருக்கக் கூடாது. அது இலங்கையில் நடந்திருக்க வேண்டும். அங்கு கிரிக்கெட் சுத்தமாகவும் நியாயமாகவும் இருக்க முடியும். இது தொடர்ந்து நடந்தால், யாரும் இனி விளையாட்டை நம்ப மாட்டார்கள். இது விளையாட்டுக்கு முழுமையான அவமானம்" என பேசியதாக வைரலாகி வருகிறது.
RayhamUnplugged என்ற கணக்கிலிருந்து பரப்பப்பட்டதாக சொல்லப்படும் இந்த வீடியோவில் உண்மை இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

