’இந்தியாவிற்கு தோல்வி பயம்..’ ஃபைனலுக்கு முன் செய்த மூடநம்பிக்கைகள்..? எழுந்த விமர்சனம்!
2023 உலகக்கோப்பை இறுதியில் இந்தியா தோல்வியடைந்தது, அதே மைதானத்தில் 2026 டி20 உலகக்கோப்பை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதனால், தோல்வியை தவிர்க்க இந்திய அணி மூடநம்பிக்கைகளை பின்பற்றியதால் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை பறிகொடுத்தது இந்தியா. சொந்தமண்ணில் இந்திய அணியே கோப்பை வெல்லும் என மைதானத்தில் நிரம்பியிருந்த ரசிகர்களை, போட்டிக்கு முன்னதாக சொன்னபடியே ’சைலண்ட்’ செய்த ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒட்டுமொத்தமாக இந்தியாவை டாமினேட் செய்தார். மேலும் கோப்பை வென்று அதன்மேல் கால்வைத்து போஸ் கொடுத்த ஆஸ்திரேலியா வீரர்கள் இந்திய ரசிகர்களின் எமோசனை மொத்தமாக உடைத்தனர்.
அப்போதே அகமதாபாத் மைதானத்தில் இறுதிப்போட்டி வேண்டாம் என பலபேர் கருத்து தெரிவித்த நிலையில், 2026 டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியையும் அதே மைதானத்தில் நடத்த உள்ளது பிசிசிஐ மற்றும் ஐசிசி.
2023 உலகக்கோப்பை வென்ற அதே மைதானத்தில் கோப்பை வென்று காட்டுகிறோம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக பார்க்கப்பட்டாலும், இந்த ஒரு முடிவை பாசிட்டாவாக எடுத்துவிட்டு, மற்ற முடிவுகளை மூடநம்பிக்கையாக எடுத்துள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
பிசிசிஐ எடுத்த மூடநம்பிக்கை முடிவுகள் என்ன..?
சொந்தமண்ணில் உலகக் கோப்பையை இந்தியா வெல்லவேண்டும் என அனைத்து முயற்சிகளையும் பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. அதற்காக இந்திய அணி விளையாடிய அனைத்து மைதானங்களிலும் சிறப்பு பூஜை செய்யப்பட்டதாகவும், அதனால் தான் மும்பையில் கூட சந்திர கிரகணத்தின் போது பயிற்சியை தள்ளிப்போட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கெல்லாம் ஒரு படி மேலாக, 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போதும், நடப்பு டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான லீக் போட்டியின் போதும் அகமதாபாத் மைதானத்திலேயே இந்தியா தோற்றது. இதன்காரணமாக அப்போது இந்திய வீரர்கள் பயன்படுத்திய ட்ரெஸ்ஸிங் அறை, வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அனைத்தையும் பிசிசிஐ மாற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு பயன்படுத்திய மைதானத்தின் ட்ரெஸ்ஸிங் அறை, ஹோட்டல் அனைத்தும் ராசி இல்லை என்பதால் அதை மாற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்தியா தங்க ஏற்பாடு செய்திருந்த ஹோட்டல் ITC நர்மதா நியூசிலாந்து அணிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்திய அணி தாஜ் ஸ்கைலைன் ஹோட்டலுக்கு மாறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அணியில் இருக்கும் மூடநம்பிக்கைகளால் மாற்றப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் இதன் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடி 2023 உலகக்கோப்பைக்கு நேரில்வந்து இந்தியா தோற்றதால், இந்தமுறை மோடியும் மைதானத்திற்கு வர வாய்ப்பில்லை எனவும் சொல்லப்படுகிறது.

