17 வயதில் இரட்டை சதம்.. U19 ஆஸ்திரேலியாவை கதறவிட்ட இந்திய வீரர்!
ஆஸ்திரேலியா யு19 அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில், ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றிய இந்தியா, டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 217 ரன்களுக்கு சுருண்டது. இந்திய தொடக்க வீரர் லக்ஷ்ய ராஜேஷ் ராய்ச்சந்தானி 210* ரன்கள் குவித்து இரட்டை சதம் பதிவு செய்ததால், இந்தியா 430/8 என வலுவான நிலையைப் பெற்றுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா யு19 அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அனைத்திலும் வெற்றிபெற்ற இந்திய அணி 3-0 என ஆஸ்டிரேலியாவை தோற்கடித்தது.
இந்தசூழலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. இரண்டு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ராஜோட்டில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 217 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. சிறப்பாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா வீரர் பிளேக் கேட்டில் சதமடித்து அசத்தினார்.
இந்நிலையில் இரண்டாவதாக பேட்டிங் செய்துவரும் இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 430 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரரான 17 வயது லக்ஷ்ய ராஜேஷ் ராய்ச்சந்தானி 20 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 210 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்துவருகிறார். லக்ஷ்ய ராஜேஷ் ராய்ச்சந்தானியின் அபார பேட்டிங்கால் 213 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலும் லக்ஷய ராய்ச்சந்தானி சதமடித்திருந்தார். இவர் விராட் கோலி மற்றும் ஜோ ரூட்டை ரோல் மாடலாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

