7 ரன்களில் ஆல் அவுட்.. டி20 வரலாற்றிலேயே மோசமான சாதனை படைத்த அணி..
நைஜீரியாவில் ஐசிசி டி20 உலகக்கோப்பை சப் ரீஜினல் ஆப்ரிக்க தகுதிச்சுற்று குரூப் சி போட்டிகள் நடக்கிறது. லாகோஸ் நகரில் நடந்த லீக் போட்டியில் நைஜீரியா மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகிய அணிகள் மோதின.
டாஸ் வென்ற நைஜீரிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சுலைமான் மற்றும் செலிம் போன்றோர் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். சுலைமான் 50 ரன்களைக் குவித்து வெளியேறினார். அசத்தலாக ஆடிய செலிம் 53 பந்துகளில் 112 ரன்களை எடுத்த நிலையில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஐசாக் ஓக்பே 23 பந்துகளில் 6 சிக்சர்கள் 3 பவுண்டரிகளை விளாசி 65 ரன்களைக் குவித்தார். இறுதியில் நைஜீரிய அணி 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 271 ரன்களைக் குவித்தது.
272 ரன்கள் எனும் இமாலய ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஐவரி கோஸ்ட் அணியின் வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். குறிப்பாக, 7 வீரர்கள் டக் அவுட்டாகினர். இறுதியில் அந்த அணி 7 ஓவர்களை மட்டுமே ஆடி அனைத்து விக்கெட்களையும் இழந்து 7 ரன்களை மட்டுமே எடுத்து 264 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் நைஜீரிய அணி சர்வதேச ஆடவர் டி20 போட்டிகளில் மூன்றாவது மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
முன்னதாக, மங்கோலியா (2024) மற்றும் ஐல் ஆஃப் மேன் (2023) அணிகள் 10 ரன்களை எடுத்திருந்ததே சர்வதேச ஆடவர் டி20 போட்டிகளில் குறைவான ரன்களாக இருந்தது. இந்நிலையில் ஐவரி கோஸ்ட் 7 ரன்களை மட்டுமே எடுத்து டி20 உலகில் குறைவான ரன்களை எடுத்த அணி என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளது.