குறையப்போகும் தங்கம் விலை? இதுதான் காரணமா? வெளியான தகவல்!
இஸ்ரேல் நாட்டுக்கும் ஹெஸ்புல்லா அமைப்புக்குமிடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருப்பதால் உலக அளவில் தங்கத்தின் விலை 3% குறைந்திருக்கிறது. இந்திய சந்தையிலும் அது எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் 800 ரூபாய் விலை குறைந்து வர்த்தகமானது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 7,200 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 57,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் பெரும் ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வருகிறது. 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இந்த நிலையில்லாத்தன்மை தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றே உலக அளவில் தங்கம், பெரும் வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது.
அமெரிக்க சந்தையில் தங்கம் 3 சதவிகிதமும், வெள்ளி 3.3 சதவிகிதமும், பிளாட்டினம் 2.6 சதவிகிதமும் ஒரே நாளில் குறைந்திருக்கிறது. இந்த வீழ்ச்சிக்கான முக்கியக் காரணமாக இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையேயான போர் நிறுத்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையேயான யுத்தம், போர் நிறுத்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக அதன் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
இன்னும் சில பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டியிருந்தாலும், இந்த போர் நிறுத்தம் நம்பிக்கை அளிக்கும் விதமாக இருப்பதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். அதே சமயம், இதை எச்சரிக்கையுடன் கையாள்வதாகவும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது நம்பிக்கையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
ட்ரம்ப் அடுத்த ஆண்டு ஆட்சியமைக்கவுள்ள நிலையில், அமெரிக்க கருவூல செயலாளராக ஸ்காட் பெஸன்ட்டை பரிந்துரை செய்திருக்கிறார். ஸ்காட் பெஸன்ட் தங்கம் சார்ந்த முதலீடுகளுக்கு சாதகமான முடிவுகளை எடுக்க மாட்டார் என அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இதுவும் தங்கத்தின் விலை குறைய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
எது எப்படியோ, தங்கம் விலை குறைந்தால் மகிழ்ச்சிதானே.! நிலையில்லாத்தன்மை தொடர்ந்து நிலவும் சூழலில், சிறுகச் சிறுக தங்கத்தில் முதலீடு செய்வது எதிர்கால நலனுக்கு சிறந்ததாகப் பார்க்கப்படுகிறது.