“கருத்து மோதல் இருந்தால் அங்கு ஜனநாயகம் இருக்கும்”- கள ஆய்வுக்கூட்ட சலசலப்பு குறித்து RB உதயகுமார்
செய்தியாளர்: பிரசன்னா
மதுரை திருமங்கலம் பகுதியில் அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருமங்கலம் எம்.எல்.ஏ., ஆர்.பி.உதயகுமார் தலைமை நடைபெற்ற இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
(முன்னதாக நேற்று அதிமுக சார்பாக மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் பகுதியில் கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் காலையில் செல்லூர் ராஜு மற்றும் மதியம் ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டங்களில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், திருமங்கலத்தில் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் அமைதியாக நடைபெற்று முடிந்தது.)
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மற்றொரு கூட்டத்தில் நடந்த சலசலப்பு குறித்து பேசுகையில்... “கருத்து மோதல் இருந்தால் அங்கு ஜனநாயகம் உள்ளது என அர்த்தம். இதைவிட பெரிய கருத்து மோதல்கூட எங்களுக்குள் நடந்துள்ளது. தூக்கி take it easy ஆக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
தொடர்ந்து அவரிடம் தேர்தல் பணி துவங்கியது என துணை முதல்வர் உதயநிதி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,
“கருத்து மோதல் இருந்தால் அங்கு ஜனநாயகம் உள்ளது என அர்த்தம்”
“திமுக-வில் வாய்பூட்டு சட்டம் போடப்பட்டுள்ளது. அப்பா அல்லது மகன் மட்டும்தான் பேசுவார்கள். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது என்பதால் எங்கள் கட்சி கூட்டணிக்கான கட்டமைப்பை வலிமைப்படுத்துகிற பணியில் உள்ளோம்” என்றார்.
முதல்வர் ஆணவத்தின் உச்சிக்கு சென்று விட்டார்:
ராமதாஸ்க்கு வேலையில்லை என முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “முதல்வர் ஆணவத்தின் உச்சிக்கு சென்று விட்டார். அனைவரையும் வேலை இல்லை என்றுதான் பேசுகிறார். உண்மையில் அவருக்குதான் வேலை இல்லை. அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால்தான் அவருக்கு எல்லாம் புரியும். அதனால்தான் எதிர்க்கட்சித் தலைவர் பரிசை அவருக்கு அளிப்போம் என அரசு ஊழியர்கள் கூறியுள்ளனர்” என்றார்.
தொடர்ந்து அவர், “எம்ஜிஆர் மற்றும் ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழாவை போல புரட்சித்தலைவி அம்மாவின் நூற்றாண்டு விழாவையும் முதலமைச்சராக நடத்தக் கூடிய காலம் வரும்” என்றார்.