U19 மகளிர் T20 உலகக் கோப்பை தொடர் | “கமலினியின் கடின உழைப்பே காரணம்” - பெற்றோர் பெருமிதம்!
செய்தியாளர்: பால வெற்றிவேல்
மலேசியாவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையே நேற்று (பிப் 3) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த திரிஷா கொங்கடிக்கு அடுத்தபடியாக 143 ரன்கள் எடுத்து அனைவரையும் கவனத்தையும் தன்பக்கம் திருப்பியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த கமலினி.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி மதுரையில் பிறந்த கமலினிக்கு தற்போது 16 வயதாகிறது. இவர், பேட்டர், சுழற்பந்து வீச்சாளர் மற்றும் விக்கெட் கீப்பர் என தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். கமலினி, சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியில் தனது கிரிக்கெட் திறமையை வளர்த்துக் கொண்டார். கிளப் கிரிக்கெட் வீரரான இவரது தந்தை குணாலனின் ஆதரவும், பயிற்சியும் கமலினியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளது.
கமலினி, தனது கிரிக்கெட் பயணத்தில் பல சாதனைகளை படைத்துள்ளார். அதில் கடந்த 2023 ஆம் ஆண்டு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்திய ஃப்ரேயர் டி20 கோப்பை போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட் விருதை வென்று அசத்தியுள்ளார். மேலும், 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தமிழ்நாடு மகளிர் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில்தான் மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் விக்கெட் கீப்பராக முத்திரை பதித்துள்ளார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற இந்தியா-19 மகளிர் அணிக்காக விளையாடிய கமலினி, ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 51 ரன்களும், இங்கிலாந்து-அணிக்கு எதிராக 56 ரன்கள் என இரண்டு அரை சதங்களை அடித்து அசத்தியுள்ளார். ஏற்கனவே மகளிருக்கான ஐபிஎல் போட்டியில் விளையாட மும்பை இந்தியன்ஸ் அணியில் ரூ.1.6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள கமலினி, இந்திய மகளிர் அணியில் விரைவில் நட்சத்திரமாக ஜொலிப்பார் என நம்பலாம்.
கமலினியின் வெற்றிக்கு அவரது கடின உழைப்பே காரணம் என கூறுகிறார் தாயார் சரண்யா. இதுபற்றி, கமலினியின் பெற்றோர் நம்மிடையே கூறியவற்றை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...