500 ஓவியர்கள் வரைந்த படங்கள்.. சென்னை செம்மொழி பூங்காவில் களைகட்டிய ஓவியக் காட்சி!
சென்னை செம்மொழி பூங்காவில் இன்று ‘ஒரு நாள் ஓவிய சங்கமம் 2025’ என்ற பெயரில் 500-க்கும் மேற்பட்ட ஓவியர்கள், கைவினை கலைஞர்கள் பங்கேற்ற ஓவிய கண்காட்சி இரண்டாவது ஆண்டாக நடைபெற்றது.
இந்த ஓவிய கண்காட்சியை பொருத்தவரை சிறு சிறு பொம்மை ஓவியங்கள் முதல் இயல்பான மனிதர்களின் வாழ்வியல் சார்ந்த புகைப்படங்கள் என அனைத்து விதமான வகைகளிலும் குறிப்பாக ஆயில் பெயிண்டிங், அக்ரலிக் பெயிண்டிங், ரியல் எஸ்டேட் பெயிண்டிங், நவீனம், ஆதிகாலம் என அனைத்து வகைகளிலும் ஓவியர்களால் வரையப்பட்டு அவர்கள் காட்சிப்படுத்தியும் வைத்திருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி ஒரு சில ஓவியர்கள் நேரடியாக உடனுக்குடன் பென்சில் ட்ராயிங் மூலம் 10 நிமிடங்கள் முதல் அரை மணி நேரத்திற்குள் வரைந்து கொடுத்தனர். அதேபோல் மெஹந்தி ஃபேஸ் பெயிண்டிங் போன்றவையும் நேரடியாக செய்து கொடுக்கப்பட்டன. பெயிண்டிங் பென்சில் ட்ராயிங் மட்டும் இன்றி கலைநயம் மிக்க கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவற்றையும் தாங்கலாகவே செய்து அவற்றை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.
வித்தியாசமான ஓவியங்களை பார்த்து ரசித்த பார்வையாளர்கள்!
இது தொடர்பாக புதிய தலைமுறையுடன் பேசிய ஓவியர் முத்துலட்சுமி, “மன அழுத்தம் காரணமாக மருத்துவர்களின் அறிவுரையின் அடிப்படையில் ஓவியம் வரைய ஆரம்பித்தேன்... மன அழுத்தம் சரியாகி தற்போது அதிகமாக ஓவியங்கள் வரைந்து காட்சிப்படுத்தியுள்ளேன். விற்பனையும் செய்து வருகிறேன்” என தெரிவித்தார்.
இதே போல் குறைந்த வயதுடைய ஓவியர் ஹகினா வரைந்த ஓவியங்களும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “13 வயதிலிருந்து ஓவியங்கள் வரைந்து வருகிறேன். தற்பொழுது 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். சிறுவயதில் இருந்து ஆர்வம் அதிகமாக இருந்ததால் இதனை தேர்ந்தெடுத்து செய்து வருகிறேன். எனது கல்லூரி படிப்பும் ஓவியம் சார்ந்து இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என கூறினார்.
மேலும் இந்த ஓவிய கண்காட்சியில் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் தங்களின் ஓவியத்தை இடம்பெறச் செய்தனர். மேலும் அவர்கள் வரைந்த ஓவியத்தை அவர்களது சைகை மொழி மூலம் விளக்கம் கொடுத்தனர்.