IPL2026| ராஜஸ்தானை வீழ்த்தி ஃபைனல் சென்றது GT.. படைக்கப்பட்ட 3 அசத்தல் சாதனைகள்!
ஐபிஎல் 2026 குவாலிஃபயர் 2ல் ராஜஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குஜராத் டைட்டன்ஸ் ஃபைனலுக்கு முன்னேறியது. 15 வயது வைபவ் சூர்யவன்ஷியின் 96 ரன்கள், 214 என பெரிய இலக்கை அமைத்தும், சுப்மன் கில் (53 பந்தில் 104*) சாய் சுதர்சன் கூட்டணியால் சாதனையான 215 ரன்கள் சேஸ் செய்து, பிளேஆஃப் வரலாற்றில் உயர்ந்த இலக்கை துரத்தி வென்றனர்.
2026 ஐபிஎல் தொடரானது யாருக்கு கோப்பை என்ற பரபரப்பான இறுதிக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணி, 14 போட்டிகளில் 9 ஆட்டங்களில் வெற்றிபெற்று முதல் அணியாக இறுதிப்போட்டியில் காலடிவைத்தது.
இந்தசூழலில் எலிமினேட்டர் போட்டியில் பலம்வாய்ந்த SRH அணியை வீழ்த்திய ராஜஸ்தான் அணி, நேற்று நடைபெற்ற குவாலிஃபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி விரைவாகவே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அணி இக்கட்டான நிலைக்கு சென்ற நிலையில், எப்போதும் அதிரடியாக விளையாடக்கூடிய வைபவ் சூர்யவன்ஷி நிதானமாக விளையாடினார். மறுபக்கம் முன்னதாக களமிறங்கிய ஜடேஜா சிக்சர் பவுண்டரி என விரட்டி சூர்யவன்ஷி மீதான அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக்கொண்டார். இறுதிவரை களத்தில் நின்ற 15 வயது சூர்யவன்ஷி தன்னுடைய திறமை என்னவென்று இன்றைய போட்டியில் உலகிற்கு எடுத்துக்காட்டினார். தன்னால் அதிரடியாக மட்டுமில்லாமல், அணிக்காக கடைசிவரை நிலைத்து நின்றும் ஆடமுடியும் என்று நிரூபித்தார். சூர்யவன்ஷி 96 ரன்கள் அடித்து அசத்திய நிலையில், 20 ஓவரில் 214 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான் அணி.
215 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக, பவர்பிளேவில் கேட்ச்சை கோட்டைவிட்டது, மோசமான பவுலிங் போன்றவற்றால் ராஜஸ்தான் அணி மோசமாக தொடங்கியது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர். 58 ரன்னில் சாய் சுதர்சன் ஹிட் விக்கெட் மூலம் வெளியேறினார். கடைசிவரை களத்தில் நின்ற சுப்மன் கில் 53 பந்தில் 104 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற குஜராத் அணி 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது.
3 அசத்தல் சாதனைகள்
அதிகபட்ச சேஸிங்
ஐபிஎல் பிளேஆஃப் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சேஸிங்கை குஜராத் டைட்டன்ஸ் செய்து சாதனை படைத்தது. இதற்குமுன்பு 204 ரன்கள் மட்டுமே அதிகபட்சமாக சேஸ்செய்யப்பட்டிருந்தது.
முதல் கேப்டன்
ஐபிஎல் பிளேஆஃப் போட்டியில் சதமடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை படைத்தார் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில்.
ஒரே அணியில் 2 பேர்
ஒரு ஐபிஎல் சீசனில் 3 வீரர்கள் 700 ரன்களுக்கு மேல் அடிப்பது இதுவே முதல்முறை. சூர்யவன்ஷி 776 ரன்கள், சுப்மன் கில் 722 ரன்கள் மற்றும் சாய் சுதர்சன் 710 ரன்கள் என அடித்து அசத்தியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஒரே அணியை சேர்ந்த 2 பேட்ஸ்மேன்கள் ஒரு சீசனில் 700 ரன்களுக்கு மேல் அடிப்பது இதுவே முதல்முறை. இச்சாதனையை சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் செய்துள்ளனர்.

