CSK-க்கு வரப்போகும் ஹர்திக் பாண்டியா..? வைரலாக பரவும் செய்தி! Ex சிஎஸ்கே வீரர் கருத்து!
ஐபிஎல் தோல்விகளுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமை குறைவு, ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மீதான விமர்சனம், 07:07 ஸ்டோரி, அஸ்வின் பதிவு என பல காரணங்கள் ஹர்திக்-சிஎஸ்கே வர்த்தக வதந்தியை தூண்டியுள்ளன. முன்னாள் சிஎஸ்கே வீரர் பத்ரிநாத், ஹர்திக் வெளியேறினால் சிஎஸ்கேக்கு வருவது சாத்தியம் என்றும், அது அணிக்கு பெரிய பலம் தரும் என்றும் கூறுகிறார்.
5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 அணிகளும் மீண்டும் தங்களுடைய அணிகளை மீள்உருவாக்கம் செய்யும் நிலையில் இருக்கின்றனர். அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி இல்லாமல் மிகப்பெரிய போராட்டத்தை நடத்திவரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் அனைத்து வீரர்களும் இருந்தும் அவர்களால் சோபிக்க முடியவில்லை.
இதற்கு காரணமாக ஹர்திக் பாண்டியாவின் மும்பை அணியின் வீரர்கள் பெரிதளவில் ஒட்டவில்லை என்றும், அணியில் ஒற்றுமையும், கோச்சிங் ஸ்டாஃபிடம் இணக்கமான சூழல் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூட ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து ஆரோக்கியமான வார்த்தைகளை பேட்டிங் பயிற்சியாளர் கிரன் பொல்லார்டு கூறவில்லை.
இந்தசூழலில் தான் ஹர்திக் பாண்டியாவின் சமீபத்திய 07:07 ஸ்டோரி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினின் எக்ஸ் தளப் பதிவு என அனைத்தும் ஹர்திக் பாண்டியா மற்றும் சிஎஸ்கே வர்த்தக நெருப்பை பற்றவைத்துள்ளன. இது எந்தளவுக்கு சாத்தியம் என்பது பிடிபடவில்லை என்றாலும், இதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் முன்னாள் சிஎஸ்கே வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கூறியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா சிஎஸ்கேவிற்கு வர்த்தகம் செய்யப்படவிருக்கிறார் என்ற வைரல் செய்தி குறித்து யூடியூப் வீடியோவில் பேசிய பத்ரிநாத், “மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா மட்டுமில்லாமல் ட்ரெண்ட் போல்ட், தீபக் சாஹர் போன்ற 38 கோடி ரூபாய் வரையிலான 3 வீரர்கள் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது. இதில் ஹர்திக் பாண்டியா மீது நான் எந்த தவறும் சொல்ல மாட்டேன், அணி ஒட்டவில்லை என்று ஹர்திக் மீது பழிபோடுவது தேவையற்றது, அவரை அணி நிர்வாகம் தான் வேறொரு அணியிலிருந்து கொண்டுவந்தது. அங்கு கேப்டனாக இருந்த ஒருவரை அழைக்கும்போது அவர் மும்பை அணியிலும் கேப்டன்சி கேட்டதில் எந்த தவறும் இல்லை.
ஒருவேளை ஹர்திக் பாண்டியா வெளியேறும் பட்சத்தில், ஏன் அவர் சிஎஸ்கேவிற்கு வரக்கூடாது. அவர் வந்தால் அது சிஎஸ்கேவிற்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும். என்னைப்பொறுத்தவரையில் ஷிவம் துபேவை கொடுத்துவிட்டு ஹர்திக் பாண்டியாவை வர்த்தகம் செய்யலாம். ஒருவேளை அவருக்காக 2 வீரர்களை கேட்டால் ஷிவம் துபே உடன் ஆயுஷ் மாத்ரேவை கொடுக்கலாம். சஞ்சு சாம்சன், ருதுராஜ் உடன் ஹர்திக் பாண்டியாவும் அணியில் இருந்தால் அது சிஎஸ்கேவை கோப்பைக்கு அழைத்துசெல்லும், அனுபவம் வாய்ந்த வீரர்கள் தான் கோப்பை வென்றுள்ளார்கள்” என பேசியுள்ளார்.

