ஐபிஎல் 2026| 100% கோப்பை இந்த அணிக்கு தான்.. ரவி அஸ்வின் உறுதி.!
2026 ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன் ரவிச்சந்திரன் அஸ்வின் தன் யூடியூப் சேனலில் தைரியமான கணிப்பை வெளியிட்டுள்ளார். பிளேஆஃப் சுற்றில் குவாலிபையர்-1ல் தோல்வியடைந்தாலும், ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி குவாலிபையர்-2ல் ராஜஸ்தான் ராயல்ஸை 100% வீழ்த்தி, அகமதாபாத் மைதானத்தில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என அவர் உறுதியாக கூறியுள்ளார்.
செய்தியாளர் - செ.யுகேஷ்
குவாலிபையர் 2 வில் வெற்றிப்பெற்று, அதன் பின் அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியிலும் வெற்றி பெற்று Gujarat Titans அணி தங்களது இரண்டாவது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி குறித்து பேசியிருக்கும் அஸ்வின், “2026 ஐபிஎல் தொடரில் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று குவாலிபையர்-1 ல் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணிதான் இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றும். குவாலிஃபையர் 2வது போட்டியில் 100 சதவீதம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை குஜராத் தோற்கடிக்கும். இதை நான் எழுதி தரக்கூட தயாராக இருக்கிறேன். குவாலிபையர்-1 ல் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி மீண்டும் வலுவான முறையில் திரும்பி வந்து கோப்பையை கைப்பற்றும். குவாலிபையர் 1 போட்டியில் Royal Challengers Bengaluru அணியிடம் 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தாலும், ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி மீண்டும் எழுச்சி பெற்று கோப்பையை கைப்பற்றும்” என அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், வைபவ் சூர்யவன்ஷி முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக இருந்தாலும் சிராஜ் மற்றும் ரபாடாவுக்கு எதிராக கவனமாக விளையாட வேண்டியிருக்கும் என்பதை அவர் அறிவார். GTக்கு எதிரான முந்தைய இரண்டு போட்டிகளிலும் சில ரன்கள் எடுத்திருந்தாலும், முழுமையாக ஆதிக்கம் செலுத்தவில்லை. வைபவ் சூர்யவன்ஷி நன்றாக விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
நடக்கவிருக்கும் குவாலிஃபையர் 2 போட்டியை பொறுத்தவரையில், லீக் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. அகமதாபாத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்ற நிலையில், ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்தசூழலில், கடந்த போட்டிகளின் ரிசல்ட் அடிப்படையில் பார்த்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே முன்னிலை வகிக்கிறது. இருப்பினும் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்தசீசன் முழுவதும் சிறந்த கிரிக்கெட்டை விளையாடியிருப்பதால் இரண்டு அணிகளுக்கும் வலுவான போட்டியாகவே இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. 2022ஆம் ஆண்டும் அகமதாபாத் மைதானத்தில் தான் ராஜஸ்தானை இறுதிப்போட்டியில் வீழ்த்தி டைட்டன்ஸ் அணி கோப்பை வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
