“துப்பாக்கிய பிடிங்க வஷி...” அடுத்த வேட்டையனை சுட்டிக்காட்டும் அஸ்வின்!
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இதன்மூலம், 14 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுத்திருக்கிறார் கேரம் பால் (ball) கிங் அஸ்வின்.
அஸ்வினின் திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய அணியில் ஆகச் சிறந்த வீரராக விளங்கிய அஸ்வினின் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் ரசிகர்கள் தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர்.
அஸ்வின் ஓய்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். தமிழக வீரரான ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அஸ்வின் ஓய்வு பெற்றது குறித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில், “அஸ்வின் அண்ணா, அணியின் சக வீரர் என்பதை விட, நீங்கள் உத்வேகமாகவும், வழிகாட்டியாகவும் விளையாட்டின் உண்மையான சாம்பியனாகவும் இருந்திருக்கிறீர்கள். உங்களுடன் விளையாடியது பெருமையாக உள்ளது.
ஒரே மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் நாம். சேப்பாக்கத்தில் உங்களுடனும், உங்களுக்கு எதிராகவும் விளையாடி உங்களைப் பார்த்தே வளர்ந்தவன் நான். களத்திலும், களத்திற்கு வெளியிலும் உங்களிடம் இருந்து கற்ற விஷயங்கள் எப்போதும் என்னுடன் இருக்கும். உங்களது அடுத்தடுத்த காரியங்களில் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.
வாஷிங்டன் சுந்தரின் அந்த பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ள அஸ்வின், “துப்பாக்கிய பிடிங்க வஷி... get together நிகழ்வில் நீங்கள் பேசிய அந்த 2 நிமிடம் மிகச் சிறப்பானதாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.