கடைசியில் அவரை கழற்றிவிடுவீர்கள்.. அர்ஷ்தீப் சிங் என்ன தவறு செய்தார்..? - அஸ்வின் கேள்வி
2024 டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய அர்ஷ்தீப், அணியில் இடம் பெறாதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தொடர்ந்து விளையாடாவிட்டால், அவரது நம்பிக்கை பாதிக்கப்படலாம், அது இந்திய அணிக்கு பாதிப்பாக அமையும் என அஸ்வின் எச்சரித்தார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கவிருக்கிறது.. மிகப்பெரிய தொடருக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், இந்திய அணி அவர்களுடைய சிறந்த காம்பினேஷனை கண்டறிய பல சோதனைகளை நடத்திவருகிறது..
எந்தவீரரை எந்த இடத்தில் விளையாட வைக்கவேண்டும், எந்த பவுலர் விளையாடப்போகிறார்கள் என்ற சோதனை முறையை கம்பீர் கையில் எடுத்துள்ளார்.. ஆனால் 2024 டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தி இந்திய அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்த அர்ஷ்தீப் சிங் தொடர்ந்து பெஞ்சில் அமரவைக்கப்படுவது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது..
அர்ஷ்தீப் சிங்கை பெஞ்சில் அமரவைத்துவிட்டு ஹர்சித் ராணாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது விமர்சனங்களை பெற்றாலும் கம்பீர் அந்த சோதனைமுறையை தொடர்ந்து முன்னெடுத்துவருகிறார்..
இந்தசூழலில் சமீபத்திய உரையாடலில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், அர்ஷ்தீப் சிங்கை பெஞ்சில் அமரவைப்பத்து மோசமான விசயம் என்றும், பெஞ்சில் அமரவைத்துவிட்டு பின்னர் ஒரேஅடியாக அணியிலிருந்து கழற்றிவிடுவீர்கள் என பேசியுள்ளார்..
ஒரு வருடமாக விளையாடவில்லை..
கடந்த 2024 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற அர்ஷ்தீப் சிங், தன்னுடைய சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 12.65 சராசரியுடன் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக முடித்தார். ஆனால் இந்திய அணி கோப்பை வென்றபிறகு கடந்த ஒரு வருடத்தில் வெறும் 5 டி20 போட்டிகளில் மட்டுமே அர்ஷ்தீப் சிங் விளையாடியுள்ளார்..
2026 டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே மீதமுள்ள நிலையில், ஆஸ்திரேலியா போன்ற அணிக்கு எதிராக அவர் களமிறக்கப்படவில்லை என்றால் அது இந்திய அணிக்கு தான் பாதகமாக வாய்ப்பு இருக்கிறது.. பும்ரா அணியிலிருந்தபோதும் விக்கெட் வேட்டை நடத்திய அர்ஷ்தீப் சிங் டி20 அணியின் பந்துவீச்சை முன்னின்று வழிநடத்தியுள்ளார்.. தற்போது அவர் தொடர்ந்து பெஞ்சில் அமரவைக்கப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது..
இதுகுறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், “நீங்கள் அணி காம்பினேஷனில் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள், ஆனால் அர்ஷ்தீப் சிங் என்ன தவறு செய்தார். டி20 கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாளரை பெஞ்சில் அமரவைப்பது இந்திய அணிக்கு தான் பாதகமானது. மேலும் அவர் தொடர்ந்து பெஞ்சில் அமர்ந்தால் அவருடைய நம்பிக்கை உடையாதா? அவருடைய மனநிலை என்னவாகும்?” என கேள்வி எழுப்பினார்..
தொடர்ந்து ரெஸ்ட்டில் இருந்தால் பின்னர் அணியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என கூறிய அஸ்வின், “இப்படி தொடர்ந்து ரெஸ்ட்டில் இருந்தால், அதற்குபிறகு அணியில் விளையாடும்போது நன்றாக விளையாட வேண்டும் என்ற அழுத்தம் உருவாகும். ஒருவேளை அவர் அந்தபோட்டியில் மோசமாக செயல்பட்டால், பின்னர் ஒரே அடியாக அணியிலிருந்து நீக்கிவிடுவார்கள். இது தனிப்பட்ட முறையில் நடந்ததை வைத்து நான் சொல்கிறேன். ஏனென்றால் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பிளேயர்களுக்கு ரெஸ்ட் வழங்கப்பட்டால், அவர்கள் சரியாக அதை கையாளுவார்கள்.. ஆனால் இந்திய அணியில் அதை கையாளுவதில் பிரச்சனை இருக்கிறது.. உங்களுக்கு ஒருவேளை ரெஸ்ட் செய்யவேண்டுமென்றால் பும்ராவை ரெஸ்ட் செய்யுங்கள், அர்ஷ்தீப் சிங்கை விளையாட வையுங்கள்” என அஸ்வின் பேசியுள்ளார்..

