NO.5-ல் திலக் வர்மா.. துபேவுக்கு முன்னதாக ஹர்சித் ராணா! பேட்டிங் ஆர்டரில் தொடரும் குழப்பம்!
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் தொடரும் குழப்பம் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில், திலக் வர்மா நம்பர் 5-ல் களமிறக்கப்பட்டார், அதேபோல ஹர்சித் ராணா ஷிவம் துபேவுக்கு முன்னதாக களமிறக்கப்பட்டார். இதனால், இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக பேட்டிங் வரிசை மாற்றங்கள் அமைந்துள்ளன.
2026 டி20 உலகக்கோப்பை எதிர்வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது..
உலகக்கோப்பைக்கு முன்னதாக அணியை தயார் செய்ய சிறந்த வாய்ப்பாக இந்த தொடர் அமையும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் தொடர்ந்து குழப்பம் இருந்துவருகிறது..
தரமான வீரர்கள் அணியில் இருந்தபோதும் அவர்கள் சரியான இடத்தில் களமிறக்கப்படாதது இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவருகிறது..
ஏன் இத்தனை குழப்பம்..??
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்ற நிலையில், இந்திய அணி 125 ரன்களுக்கு மோசமான முறையில் ஆட்டமிழந்தது.. ஆஸ்திரேலியா 13.2 ஓவரிலேயே 126 ரன்களை அடித்து வெற்றிபெற்றது..
இந்தசூழலில் இந்திய அணியின் தேர்விலும், அணியின் பேட்டிங் வரிசையிலும் ஏற்பட்ட குழப்பம் ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது..
நடந்துமுடிந்த ஆசியக்கோப்பை டி20 தொடரில் நம்பர் 5 வீரராக களமிறக்கப்பட்ட சஞ்சு சாம்சன், இன்றைய போட்டியில் நம்பர் 3 வீரராக களமிறக்கப்பட்டார்.. அதேபோல நம்பர் 3 இடத்தில் சிறப்பாக பேட்டிங்கை வெளிப்படுத்திய திலக்வர்மா 5வது வீரராக களமிறக்கப்பட்டார்.. போதாக்குறைக்கு ஷிவம் துபே பேட்டிங்கிற்கு வருவதற்கு முன்பாக ஹர்சித் ராணா பேட்டிங் செய்ய களமிறக்கப்பட்டார்..
அதேபோல ஆடும் லெவனில் அர்ஷ்தீப் சிங், ரிங்கு சிங் இருவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 3 ஸ்பின்னர்கள் இடம்பெற்றனர்.. ஹர்சித் ராணா 2 ஓவர்களுக்கு 27 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட்டையும் வீழ்த்தவில்லை..
நம்பர் 3 இடத்தில் களமிறங்கி தென்னாப்பிரிக்கா தொடரில் சதம் விளாசிய திலக் வர்மா, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் அரைசதமடித்து அசத்தியிருந்தார்.. அதேபோல டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ள அர்ஷ்தீப் சிங் எதற்காக பெஞ்சில் அமரவைக்கப்படுகிறார் என்ற கேள்விகளை எல்லாம் நெட்டிசன்கள் எழுப்பிவருகின்றனர்..

