டி20 வரலாற்றில் 3வது இந்தியர்.. உலகத்தரவரிசையில் NO.1 வீரராக மாறினார் அபிஷேக் சர்மா!
இந்தியாவின் அதிரடி தொடக்க வீரரான அபிஷேக் சர்மா, தனது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சக வீரரான டிராவிஸ் ஹெட்டை பின்னுக்கு தள்ளி டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் முதலிடத்திலிருந்த சூர்யகுமார் யாதவின் இடத்தை தட்டிப்பறித்த டிராவிஸ் ஹெட், அதற்கு பிறகு ஒரு வருடமாக நம்பர் 1 இடத்தில் சிம்மசனமிட்டு அமர்ந்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அபிஷேக் சர்மா அவரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தன்வசப்படுத்தியுள்ளார். ஆனால் டிராவிஸ் கடந்த ஒருவருடமாக டி20 போட்டிகளில் பெரிதாக விளையாடவில்லை, கடைசியாக செப்டம்பர் 2024-ல் ஒரு டி20 போட்டியில் விளையாடிய அவர், சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் தவறவிட்டார்.
டி20 கிரிக்கெட்டில் 3வது இந்தியராக சாதனை..
நடப்பாண்டு தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபிஷேக் சர்மா கடைசியாக இந்தியாவுக்காக விளையாடினார். அந்த தொடரின் கடைசி ஆட்டத்தில் 54 பந்துகளில் 135 ரன்கள் அடித்து துவம்சம் செய்த அவர் மிரட்டிவிட்டார். இதன்மூலம் தற்போது ஐசிசியின் டி20 தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் சூர்யகுமாருக்குப் பிறகு டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.
தரவரிசையில் இந்திய அணி வீரர்கள் விவரம்..
பேட்டிங் தரவரிசையில், டி20-ல் அபிஷேக் சர்மா முதலிடத்திலும், திலக் வர்மா 3வது இடத்திலும் நீடிக்கின்றனர். ODI-ல் சுப்மன் கில் முதலிடத்திலும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி 3வது, 4வது இடத்திலும் நீடிக்கின்றனர். டெஸ்ட்டை பொறுத்தவரையில் ரிஷப் பண்ட் 7வது இடத்தில் நீடிக்கிறார்.
பந்துவீச்சு தரவரிசையில், டெஸ்ட்டில் பும்ரா முதலிடத்திலும், ஒருநாள் கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ் இரண்டாவது இடத்திலும், வருண் சக்கரவர்த்தி 3வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில், டெஸ்ட்டில் ஜடேஜா முதலிடத்திலும், ஒருநாள் கிரிக்கெட்டில் ஜடேஜா 10வது இடத்திலும், டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா முதலிடத்திலும் நீடிக்கின்றனர்.
அணி தரவரிசையில், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, டெஸ்ட்டில் 4வது இடத்தில் நீடிக்கிறது.