WCL 2025 | அரையிறுதிப் போட்டி.. பாகிஸ்தான் உடன் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு!
முன்னாள் வீரர்கள் பங்கேற்று விளையாடும் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் டி20 லீக்கின் இரண்டாவது சீசன் கடந்த ஜுலை 18-ம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ், இங்கிலாந்து சாம்பியன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் முதலிய 6 அணிகள் பங்கேற்றன.
இந்தியா சாம்பியன்ஸ் அணியில் கேப்டனாக யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, இர்ஃபான் பதான், யூசுப் பதான், ராபின் உத்தப்பா, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 13.2 ஓவரில் 145 ரன்களை சேஸ்செய்த இந்தியா சாம்பியன்ஸ் அணி, உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் லீக்கின் அரையிறுதிக்குள் காலடி வைத்தது. கடைசி 7 ஓவரில் 93 ரன்கள் அடித்தால் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை பெறும் என்ற சூழலில், அதிரடியாக ஆடிய இந்தியா வெஸ்ட் இண்டீஸை தொடரிலிருந்து வெளியேற்றியது.
இந்த சூழலில் அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் உடன் மோதும் சூழல் உருவாகியிருக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டாம் என்ற முடிவை இந்திய வீரர்கள் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்தியா மறுப்பு..
பஹல்காம் தாக்குதல் காரணமாக, ஜுலை 20-ம் தேதி நடக்கவிருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் விளையாட இந்தியா சாம்பியன்ஸ் அணி மறுப்பு தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் விளையாட ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்ஃபான் பதான், யூசுப் பதான் உள்ளிட்ட வீரர்கள் விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்த சூழலில் தற்போது இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் அரையிறுதிப்போட்டியில் விளையாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியிலும் விளையாட வேண்டாம் என இந்திய வீரர்கள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை போட்டி ரத்துசெய்யப்பட்டால் விதிகளின் படி பாகிஸ்தான் அணி அரையிறுதியில் விளையாடமலே இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
இதற்கு முன்னதாக பாகிஸ்தான் - இந்தியா விளையாடும் அரையிறுதி போட்டிக்கான ஸ்பான்சரிலிருந்து விலகுவதாக இந்திய நிறுவனமான Easemytrip அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.