மிகப்பெரிய மோதல்.. இந்தியாவை அச்சுறுத்தக் கூடிய 3 பாகிஸ்தான் வீரர்கள்.. சமாளிக்குமா இந்தியா..?
2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டத்திற்கு எதிராக பாகிஸ்தான் அணியின் மூன்று முக்கிய வீரர்கள் அச்சுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக பயமே இல்லாத டி20 கிரிக்கெட்டை விளையாடி வரும் இந்திய அணி 61 போட்டிகளில் 53 வெற்றிகளை ருசித்துள்ளது. வெற்றி சதவீதத்தை பொறுத்தவரை வேறு எந்த அணியும் இந்தியாவை நெருங்கி வரவில்லை. தொடக்க வீரர்கள் தொடங்கி 8ஆவது வீரர் வரை அதிரடிக்கு பஞ்சமில்லாமல் இந்திய அணி ஜொலித்து வருகிறது.
இப்படியான ஒரு தலைசிறந்த அணியை தான் நாளை டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் எதிர்கொள்ளவிருக்கிறது. டி20 உலகக்கோப்பையை பொறுத்தவரை 8 மோதல்களில் இந்தியாவை ஒருமுறை மட்டுமே பாகிஸ்தான் வென்றுள்ளது.
இந்தியாவிற்கு எதிராக பெரிய ரெக்கார்டு இல்லையென்றாலும், 2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதலானது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நாட்டுக்கு இடையேயான அரசியல் பதற்றமானது கிரிக்கெட்டின் ஆடுகளம் வரை வந்தது இம்முறை மட்டுமே. இரு நாட்டு வீரர்களும் கைக்குலுக்கிக் கொள்ளாதது முதல், இந்திய அணி ஆசியக் கோப்பையை வாங்காமல் புறக்கணித்தது, இந்தியாவிற்கு எதிரான உலகக்கோப்பை போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தது வரை, இரண்டு நாடுகளுக்கு இடையேயான இந்த ஒரு போட்டியை சுற்றி பல்வேறு விசயங்கள் இதுவரை நடந்துள்ளது.
இந்நிலையில் நாளை நடக்கவிருக்கும் மிகப்பெரிய ரைவல்ரி மோதலில் இந்திய அணிக்கு 3 பாகிஸ்தான் வீரர்கள் அச்சுறுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. அவர்கள் யார் என்பதை இங்கே பார்க்கலாம்..
3. ஷாஹீன் அப்ரிடி
இந்தியாவை கட்டுக்குள் வைக்க வேண்டும், சாய்க்க வேண்டுமென்றால் அவர்களின் விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே வீழ்த்த வேண்டும். அந்த இடத்தை அனுபவம் வாய்ந்த பாகிஸ்தான் இடது கை வேகப்பந்துவீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி இம்முறை நிரப்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பழைய ஃபார்மில் ஷாஹீன் அப்ரிடி இல்லையென்றாலும், புதிய பந்தில் விக்கெட்டை வீழ்த்தக்கூடிய சில நல்ல இன்ஸ்விங் பந்துகளை வீசுகிறார்.
கடந்த 2021 டி20 உலகக்கோப்பையில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி தனியொரு ஆளாக இந்தியாவை தோல்விக்கு அழைத்துச்சென்ற ஷாஹீன் அப்ரிடி, இம்முறை பாகிஸ்தானின் 3 அஸ்திரங்களில் ஒன்றாக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2. சாஹிப்சாதா ஃபர்ஹான்
பாகிஸ்தானின் ஆக்ரோஷமான தொடக்க வீரரான சாஹிப்சாதா ஃபர்ஹான் பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய பேட்டிங் ஆயுதமாக இருந்துவருகிறார். இந்திய அணி மிகவும் ஆக்ரோஷமான பேட்டிங் அணுகுமுறையை வெளிப்படுத்திவருவதால், பாகிஸ்தானும் அதே பாணியில் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்கு மிகப்பெரிய அஸ்திரமாக இன்ஃபார்மில் இருந்துவரும் ஃபர்ஹான் அந்த வேலையைச் சிறப்பாக செய்ய முடியும்.
2025 ஆசிய கோப்பையில், வலது கை பேட்ஸ்மேனான ஃபர்ஹான் ஜஸ்பிரித் பும்ராவை பல சிக்ஸர்களுக்கு அடித்தது பெரிய அளவில் பாராட்டப்பட்டது. பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற விரும்பினால், ஃபர்ஹான் சிறப்பாக விளையாட வேண்டியது கட்டாயம்.
1. உஸ்மான் தாரிக்
சமீபத்தில் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய பேசுபொருளாக இருப்பவர், பாகிஸ்தானின் மர்ம சுழற்பந்து வீச்சாளரான உஸ்மான் தாரிக். அமெரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் அறிமுகமான பிறகு, ஊர் முழுவதும் உஸ்மான் தாரிக் என்ற பெயர் மட்டுமே பேசுபொருளாக மாறிவிட்டது. அவரின் பந்துவீசும் முறை மற்றும் பவுலிங் ஆக்சனில் பாதியில் நிறுத்தி தாமதமாக பந்தைவீசுவது கிரிக்கெட் உலகில் ஒரு புயலையே உருவாக்கியுள்ளது. தனது குறுகிய டி20 வாழ்க்கையில், தாரிக் 5.37 என்ற சிறந்த எகானமி உடன் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
சமீபமாக இந்திய பேட்ஸ்மேன்கள் கண்டிசனுக்கு ஏற்றார் போல் ஆடாமல் ஆக்ரோஷமாக ஆடி விக்கெட்டை இழப்பதால், உஸ்மான் தாரிக் தனது மர்மமான பந்துவீச்சால் இந்தியாவிற்கு சிக்கலை உருவாக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்கு இருக்கும் இன்னொரு சவால்..
இதுபோக இலங்கை மண்ணில் இந்திய அணி கடந்தமுறை மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தது. 0-3 என வரலாற்று தோல்வியை சந்தித்திருந்த இந்திய அணியில் 23 முறை இந்திய வீரர்கள் ஸ்பின்னர்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இது ஒருபுறம் இருக்க போட்டி நடைபெறவிருக்கும் கொழும்பு மைதானத்தில் பாகிஸ்தான் சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளது. 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை பாகிஸ்தான் பெற்றுள்ளது. அதில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான வெற்றிகளும் அடங்கும். இந்தசூழலில் இந்திய அணி கொழும்புவின் ஆடுகளத்தின் தன்மை மற்றும் பாகிஸ்தானின் 3 அச்சுறுத்தும் வீரர்களை கடந்து வெற்றியை 8-1 என மாற்றுமா என்ற எதிர்ப்பார்ப்புடன் இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

