‘சின்ன பசங்க கிட்ட கூட அரசியல புகுத்துறாங்க..?’ பாகிஸ்தான் கிரிக்கெட்டை விமர்சித்த அஸ்வின்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான விளையாட்டை தவிர்க்கும் முடிவை விமர்சித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், பாகிஸ்தான் சின்ன பசங்க கிட்ட கூட அரசியலை புகுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பிசிசிஐ அரசியலையும் விளையாட்டையும் தனி தனியாக பார்த்துள்ளது என பாராட்டியுள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடங்க இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மட்டும் விளையாட மாட்டோம் என கூறியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முடிவை சுற்றி தொடர்ந்து விவாதங்கள் இருந்துவருகின்றன.
இவ்விவகாரம் குறித்து பல முன்னாள் வீரர்கள் பேசிவரும் நிலையில், லீக் போட்டியை தவறவிட்டால் நாக் அவுட் போட்டியில் இந்தியா உடன் விளையாட நேர்ந்தால் அப்போதும் பாகிஸ்தான் விளையாடாதா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
இந்த சூழலில் எப்படியும் பாகிஸ்தான் கடைசியில் இந்தியா உடன் விளையாட சம்மதித்து விடும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், இன்று பேசியிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் '“டி20 உலகக் கோப்பை தொடர்பாக நாங்கள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்ற தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். விளையாட்டில் அரசியல் இருக்கக்கூடாது. நாங்கள் கவனமாக ஆலோசித்த பின்னரே இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இது ஒரு பொருத்தமான முடிவுதான்” என அவர் மீண்டும் இந்தியா உடன் விளையாட மாட்டோம் என உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் சின்ன பசங்க கிட்ட கூட அரசியலை புகுத்துவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.
சின்ன பசங்களிடம் கூட அரசியலை புகுத்துறாங்க..
தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், இதுவரை பல அணிகள் வேறு நாட்டிற்கு வந்து விளையாட மாட்டோம் என கூறியிருக்கிறார்கள். ஒருமுறை ஆஸ்திரேலியா கூட இலங்கைக்கு வந்து விளையாட முடியாது என கூறியது, ஆனால் ஒரு தொடரில் ஒரு அணிக்கு எதிராக மட்டும் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் கூறியிருப்பது இதுதான் முதல்முறை என்று கூறினார்.
மேலும் பாகிஸ்தான் நிர்வாகம் சின்ன பசங்க கிட்ட கூட அரசியலை புகுத்துவதாக பேசிய அவர், ‘யு19 உலகக்கோப்பையில் கூட இந்தியாவிற்கு எதிராக 33 ஓவர்களில் இலக்கை எட்டியிருந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு சென்றிருக்கும். சமீபத்தில் கூட துபாயில் நடந்த ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்திருந்தனர். ஆனால் அந்த சின்ன பசங்க கிட்ட என்ன இன்ஸ்ட்ரக்சன் கொடுக்கப்பட்டிருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது. நீ அரையிறுதிக்கு கூட போக வேண்டாம், ஆனால் இந்தியாவிடம் தோற்க கூடாது என கூறியிருப்பார்கள்.
இந்த விசயத்தில் நான் பிசிசிஐ-க்கு பாராட்டுகளை கொடுக்க விரும்புகிறேன். இதைச் சொன்னால் பலர் அண்ணா நீங்க பிசிசிஐ-க்கு முட்டு கொடுக்கிறீங்க, அணை கட்டுறீங்கனு சொல்லுவாங்க. ஆனால் பிசிசிஐ ஒருமுறை கூட விளையாட்டில் அரசியலை கொண்டுவந்தது கிடையாது. எங்களுக்கு எந்த அழுத்தமும் இருந்தது கிடையாது. பிசிசிஐ எப்போதும் அரசியலையும், விளையாட்டையும் தனி தனியாக பார்த்துள்ளது” என பேசியுள்ளார்.

